பிரதமர் மோடியின் புகழ்பாடும் பிரசாந்த் கிஷோர்!


“காந்தி, ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒருவர், கோட்ஸேயின் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களுடன் எப்படி இணைந்திருக்க முடியும்?” என்று சில மாதங்களுக்கு முன்னர் நிதீஷ் குமாரைப் பார்த்துக் கேள்வி எழுப்பியவர் பிரசாந்த் கிஷோர். இப்போதெல்லாம் மோடி புகழ்பாடிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் ‘இந்தியா டுடே’ செய்தி சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் மோடியை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.

“மோடியின் 50 ஆண்டுகால அரசியல் பயணத்தைப் பாருங்கள். அவர் 15 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் பிரசாகராகக் கழித்திருக்கிறார். சமூக அமைப்பில் பொதுமக்களைப் புரிந்துகொள்ளவும், உரையாடவும், பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் அதில் அவருக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைத்திருக்கும். அதன் பின்னர், 15 ஆண்டுகள் பாஜகவில் ஒரு அரசியல் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அப்போது நிர்வகித்தல், தயாரிப்புகளை மேற்கொள்ளுதல், அரசியல் செயல்பாடுகளைத் திட்டமிட்டபடி ஒருங்கிணைத்தல் என நிறுவன ரீதியிலான அணுகுமுறைகள் அவருக்குக் கிடைத்தன.

15 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். இப்போது பிரதமராக இருக்கிறார். அவரது இந்த 45 ஆண்டுகால அனுபவம் இந்தியாவில் உண்மையிலேயே தனித்துவம் கொண்டது. சமூகத்தை அதன் அடியாழம் வரை புரிந்துகொண்ட, அரசியல் கட்சியை நிர்வகித்த, அரசை நிர்வகித்த அனுபவம் கொண்ட இன்னொரு அரசியல் தலைவரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

மோடிக்குக் கிடைத்திருக்கும் நீண்டகால அனுபவம், வாக்காளர்களின் அபிலாஷைகளையும், குறிக்கோள்களையும் தானாகவே புரிந்துகொள்ள உதவுகிறது. 40-45 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் அவரால் விஷயங்களை உணர்ந்துகொண்டு மறுபரிசீலனை செய்ய முடிகிறது.

மோடி எதையும் காது கொடுத்துக் கேட்கக்கூடியவர். உன்னிப்பாகக் கவனிப்பவர். அனைத்து கோணங்களிலும் விஷயங்களை அணுக அது அவருக்குக் கைகொடுக்கிறது. அவர் தவறுகள் செய்யக்கூடியவர்தான். ஆனால், இப்படி செவிமடுப்பது அவரது சிறப்புகளில் ஒன்று” என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.

காங்கிரஸில் சேர முடிவெடுத்திருந்த பிரசாந்த் கிஷோர், அது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் 2 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். கடைசி நேரத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். அதற்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகச் சொல்லாவிட்டாலும், காங்கிரஸில் சேர்ந்திருந்தால் தனக்கும் அக்கட்சிக்கும் அது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியிருக்கும் என்று இந்தப் பேட்டியில் பிரசாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

x