கர்நாடகா கோலாரில் கிறிஸ்துவ மத புத்தகங்கள் எரிப்பு


கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதாவுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகையில், சிறுபான்மையினர் மீதான எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கோலார் பகுதியில், இன்று(டிச.12) ஞாயிறு தேவாலய வழிபாடு முடிந்து வழக்கம்போல பிரச்சராம் மேற்கொண்ட கிறிஸ்துவ மதத்தினருக்கு எதிராக, இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் கிறிஸ்துவ தரப்பினர் வைத்திருந்த மத புத்தகங்கள், பிரசுரங்களைப் பறித்து ஒரு கும்பல் தீ வைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.

கர்நாடக மாநில அரசு கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவுக்கான ஏற்பாடுகளை அறிவித்தது முதலே, சிறுபான்மையினருக்கு எதிரான வரம்பு மீறல்கள் அங்கே அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக மட்டுமே புதிய சட்ட மசோதா அமைந்திருக்கும். உத்தர பிரதேசம் போன்ற இதர மாநிலங்களில், ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் சட்டங்களைப் பின்பற்றியே, கர்நாடகாவின் புதிய சட்ட மசோதா உருவாகிறது” என்றார்.

பாஜக ஆளும் கர்நாடகாவில், சிறுபான்மையினருக்கு எதிராக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் தாக்குதல் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. உண்மை அறியும் குழு ஒன்றின் அறிக்கையின்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் இதுவரை 38 சம்பவங்கள் இதுபோல நடந்திருப்பதாக தெரியவருகிறது.

x