ஹேக்கிங் அச்சுறுத்தலுக்கு ஆளான மோடியின் டிவிட்டர் கணக்கு


மோடி

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு இன்று(டிச.12) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அந்த ட்விட்டர் கணக்கினை மீட்டனர்.

பிரதமர் மோடி 2 ட்விட்டர் கணக்குகளில் செயல்படுகிறார். நரேந்திரமோடி(@narendramodi ) என்ற தனது பெயரில் ஒன்றும், பிரதமர் அலுவலகம்(@PMOIndia) சார்பிலான இன்னொன்றுமாக இந்த 2 ட்விட்டர் கணக்குகளும் பராமரிக்கப்படுகின்றன. இதில் மோடியின் பிரத்யேக ட்விட்டர் கணக்கு இன்று அதிகாலை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

இந்த விபரம் உடனடியாக பிரதமர் அலுவலத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் ட்விட்டர் நிர்வாகத்தை தொடர்புகொண்டு, மோடியின் ட்விட்டர் கணக்கினை விரைந்து திரும்பப் பெற்றனர்.

ஹேக் செய்யப்பட்ட மோடியின் ட்விட்டர் கணக்கில் இடம்பெற்றதாக சொல்லப்படும் பதிவு

மோடியின் ட்விட்டரை ஹேக் செய்தவர்கள், அதில் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாக பதிவிட்டதாகவும் தெரிய வருகிறது. அப்படியான பதிவு ஒன்றில், ’இந்தியா அதிகாரபூர்வமாக பிட்காயினை கைக்கொண்டிருப்பதாக’ அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ’அதிகாரபூர்வமாக பிட்காயின்களை வாங்கியுள்ள இந்தியா அவற்றை இந்தியர்களுக்கு விநியோகிக்க உள்ளதாக’வும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கு திரும்ப பெறபட்டது குறித்து, பிரதமர் அலுவலகத்துக்கான ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு விளக்கமும் வெளியானது. அதில் நடந்த சம்பவம் குறித்து சுருக்கமாக விளக்கப்பட்டதுடன், அப்படி வெளியான பதிவை பொருட்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோடியின் பிரத்யேக ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஹேக்கர்களின் பின்னணியில் இருப்பது நிஜமாகவே கிரிப்டோகரன்சி ஆர்வலர்களா, அல்லது அவர்களின் போர்வையில் விஷமிகளின் கைவரிசையா எனவும் விசாரணைகள் தொடர்கின்றன.

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்பதும், அமெரிக்க அதிபர்கள் தொடங்கி பல்வேறு நாட்டுத் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்கர்கள் பிடியில் சிக்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

x