பெண்களின் வாக்குகளுக்குக் குறிவைக்கும் கட்சிகள்!


40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கோவாவில், 2022 பிப்ரவரியில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து, அரசியல் கட்சிகள் கவர்ச்சிகரமான திட்டங்களை முன்வைக்கின்றன.

மேற்கு வங்கத்துக்கு வெளியே, திரிணமூல் காங்கிரஸின் எல்லையை விரிப்பதில் மும்முரமாக இருக்கும் மம்தா பானர்ஜி, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியைச் சுவைக்க பல அதிரடித் திட்டங்களை வகுத்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும், மாதம் ரூ. 5,000 வழங்கப்படும் எனும் அறிவிப்பு. ‘கிருஹலட்சுமி’ எனும் நாமகரணத்துடன் இதைக் கொண்டுவரப்போவதாக இன்று (டிச.11) அறிவித்திருக்கிறார் திரிணமூல் எம்பியும் கட்சியின் கோவா மாநிலத் தேர்தல் பொறுப்பாளருமான மஹுவா மொய்த்ரா. மாதம் ரூ.5,000 உத்தரவாதமாகக் கிடைக்கும் என்பதால், பணவீக்கத்தை எதிர்கொள்ள இல்லத்தரசிகளுக்கு உதவ முடியும் என்று திரிணமூல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பே, திரிணமூல் சார்பில் இதற்கான அட்டைகள் வழங்கப்படும். அதில் பிரத்யேகமான அடையாள எண்களும் குறிக்கப்படும். திரிணமூல் வென்று ஆட்சியமைத்த பின்னர் அவற்றை வைத்து அந்தத் தொகை, இல்லத்தரசிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மஹுவா மொய்த்ரா

இதுகுறித்துப் பேசிய மஹுவா மொய்த்ரா, “இந்தத் திட்டத்தின்கீழ், கோவா மாநிலத்தின் 3.5 லட்சம் இல்லத்தரசிகள் பலன்பெறுவார்கள். பாஜக ஆட்சியில் அமலில் இருக்கும் ‘கிருஹ ஆதார்’ திட்டத்தின் வருமான உச்சவரம்பும் நீக்கப்படும். ‘கிருஹ ஆதார்’ திட்டத்தின்கீழ், பாஜக அரசு ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் மட்டும்தான் வழங்குகிறது. வருமான உச்சவரம்பு இருப்பதால் 1.5 லட்சம் பேர்தான் பலனடைகிறார்கள். கிருஹ ஆதார் திட்டத்துக்கு, ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் தேவை எனும் நிலையில், மாநில பாஜக அரசு வெறும் 140 கோடி ரூபாய்தான் ஒதுக்குகிறது. இதனால் பலரும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியவில்லை” எனக் கூறினார்.

இந்தத் திட்டத்துக்காக மாநில ஜிடிபியில் 6 முதல் 8 சதவீதம் ஒதுக்கப்படும் என்றும் திரிணமூல் கூறியிருக்கிறது.

ஏற்கெனவே, இதேபோன்ற வாக்குறுதியை ஆம் ஆத்மி கட்சியும் வெளியிட்டிருந்தது. குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 2,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின்கீழ் வராதவர்களுக்கும் மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

காங்கிரஸும் தன் பங்குக்குப் பெண்களின் வாக்குகளுக்குக் குறிவைத்திருக்கிறது. நேற்று (டிச.10) கோவா சென்றிருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் வென்றால் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். பாஜக பெண்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்டது என்று விமர்சித்த பிரியங்கா, வெளியிலிருந்து வரும் கட்சிகளின் முந்தைய செயல்பாடுகளையும் கோவா மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

40 தொகுதிகளிலும் திரிணமூல் தனித்துக் களம் காணும் என்றே தெரிகிறது. எனினும், கடந்த முறை 3 இடங்களில் வென்ற மகாராஷ்டிரவாதி கோமன்டக் கட்சி (எம்.ஜி.எஃப்) இம்முறை திரிணமூலுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின்றன. கட்சியின் 3 எம்எல்ஏக்களில் இருவர் பாஜகவில் இணைந்துவிட்டதால், எம்ஜிஎஃப் கட்சி பாஜக மீது கோபத்தில் இருக்கிறது.

விஜய் சர்தேசாய் தலைமையிலான கோவா ஃபார்வேர்டு கட்சி (ஜிஎஃப்பி), காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் களம் காண்கிறது. 2017 தேர்தலில் பாஜக 13 இடங்களில் வென்றது. காங்கிரஸுக்கு 17 இடங்கள் கிடைத்தன. எனினும், 3 இடங்களில் வென்றிருந்த ஜிஎஃப்பி உள்ளிட்ட சில கட்சிகளும், சுயேச்சைகளும் அளித்த ஆதரவால் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. இம்முறை பாஜக முகாமிலிருந்து காங்கிரஸ் முகாமுக்கு ஜாகை மாறிவிட்டது ஜிஎஃப்பி!

திரிணமூலின் வருகையால் இம்முறை தேர்தல் களம் இன்னமும் பரபரப்பாகியிருக்கிறது. வாக்குகள் பிரிவது பாஜகவுக்குச் சாதகமாக அமையுமா, காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா என்றும் விவாதங்கள் நடக்கின்றன.

x