மரடோனாவின் வாட்ச்!: துபாயில் தொலைந்தது; அஸாமில் மீண்டது!


மரடோனாவின் வாட்ச்

உலகப்புகழ் கால்பந்து விளையாட்டு வீரரான மரடோனாவின் பிரத்யேக கைக்கடிகாரம், துபாயில் காணாமல் போய் அஸாமில் மீட்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவை சேர்ந்த மரடோனா கால்பந்து விளையாட்டின் கடவுளர்களில் ஒருவர். கடந்தாண்டு நவம்பரில் மாரடைப்பால் மரணமடைந்த மரடோனாவின் பல்வேறு உடைமைகள், துபாய் காப்பகம் ஒன்றில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த உடைமைகளில் மரடோனாவின் பிரத்யேக கைக்கடிகாரமும் ஒன்று.

ஹுப்ளட் வாட்ச்சுகளுடன் மரடோனா

பிரபல ஹுப்ளட் கடிகார தயாரிப்பு நிறுவனம், 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை முன்வைத்து, மரடோனாவின் பெயரில் தனித்துவமிக்க கைக்கடிகாரங்களை தயாரித்தது. உயரிய தரத்திலான செயல்பாட்டுடன், மரடோனாவின் கையெழுத்து, அவரது ஜெர்சி எண், மரடோனாவின் உருவம் உள்ளிட்டவை இந்த வாட்ச்சில் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

250 என்ற எண்ணிக்கைகளில் தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் ஒன்றின் விலை ரூ20 லட்சம். தயாரான சூட்டில் விற்றுத் தீர்ந்த இந்த வாட்ச்சுகளுக்கு இணைய சந்தைகளில் இன்னமும் மதிப்பு அதிகம். இந்த வாட்சுகளில் 2, மரடோனாவுக்கு பரிசாகவும் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்று துபாய் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அஸாமை சேர்ந்த வாசித் ஹூசைன் என்பவர் துபாயில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்படி மரடோனா உடைமைகள் வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் வாசித் பணியாற்றியபோது, வாசித் ஹூசைன் மரடோனாவின் மதிப்புமிக்க கைக்கடிகாரத்துடன் தப்பிவிட்டதாக துபாய் போலீஸ் பின்னர் கண்டறிந்தது.

அஸாம் போலீஸாரை தொடர்பு கொண்டு துபாய் போலீஸார் அளித்த விபரங்களின் அடிப்படையில், இன்று(டிச.11) அதிகாலை வாசித்தின் வீட்டில் அவரை அசாம் போலீஸார் வளைத்தனர். பின்னர் அங்கிருந்து மரடோனாவின் பிரத்யேக வாட்ச்சையும் கைப்பற்றினர்.

இது குறித்து அஸாம் முதல்வர் ஜிமாந்த பிஸ்வா சர்மா மற்றும் அஸாம் போலீஸ் டிஜிபி ஆகியோர் மரடோனாவின் வாட்ச் படங்களை ட்விட்டரில் பகிர்ந்து பெருமை கொண்டுள்ளனர்.

x