கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்


ஆய்வில் மருத்துவக் குழு

பல்வேறு வைரஸ் பரவல்களுக்கு மத்தியில், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதை அடுத்து புதிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டு அங்கு கோழி, வாத்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மத்தியில், ஜிகா மற்றும் நோரோ வைரஸ் பரவல்களும் கேரளாவை அச்சுறுத்தும் வகையில் தலைகாட்டின. சுகாதாரத் துறையின் துரித நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு காரணமாக அவற்றின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனபோதும் முழுமையாக அபாயம் நீங்கியபாடில்லை.

இவற்றுக்கிடையே ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவலை கால்நடைத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தகழி பஞ்சாயத்தில் வாத்து மற்றும் கோழிகள் மத்தியில் அவை அடையாளம் காணப்பட்டுள்ளதால், அப்பகுதியில் அவற்றில் கணிசமானவற்றை அழிக்க உத்தரவானது. பறவைக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்ட இடத்திலிருந்து 1 கிமீ சுற்றளவில் சுமார் 10 ஆயிரம் வாத்துக்கள் கொல்லப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து கண்காணிக்க 10 மருத்துவக் குழுக்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன. மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் பறவைக் காய்ச்சல் மிகவும் அரிதாகவே காற்றில் பரவவும், மனிதருக்கு தொற்றவும் செய்யும். எனினும் தேவையான மருத்துவ முன்னேற்பாடுகளுக்கு அங்கே உத்தரவிடப்பட்டுள்ளன.

ஆனால், பண்ணையாளார்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி நிலவுகிறது. பறவைக் காய்ச்சல் பீதியாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு அப்பாலும் கண்காணிப்பின் பெயரில் அதிகாரிகள் முகாமிட்டு இருப்பதாலும், வரும் விழாக்கால கறி விற்பனை பாதிக்கப்படும் என அவர்கள் புலம்பி வருகின்றனர்.

x