டெல்லி எல்லையை காலி செய்யும் விவசாயிகள்: போராட்டம் முடிந்ததாக அறிவிப்பு


மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி எல்லையில் ஓராண்டாக தொடர்ந்த விவசாயிகளின் போராட்டம் முடிவடைந்ததாக, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவ.25 அன்று, டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம் தொடங்கியது. அங்கு குழுமி இருந்தபடி, டெல்லி எல்லைக்குள்ளும் வெளியேயுமாக பலகட்ட போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர். விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, இந்த ஆண்டின் நவம்பர் மாத தொடக்கத்தில், அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதற்கிடையே நவ.19 அன்று சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். அதன்படியே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட தங்களது இதர கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் போராட்டம் தொடரும் என சில விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு பல தரப்பிலிருந்தும் அறிவுறுத்தல்களும், வேண்டுகோள்களும் விவசாய சங்கத் தலைவர்களுக்கு வரத் தொடங்கின.

இவற்றைத் தொடர்ந்து விவசாயிகள் மீதான காவல் துறை வழக்குகள் அனைத்தையும் நிபந்தனைகளற்று திரும்பப்பெறுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை விவசாய சங்கத் தலைவர்கள் முன்வைத்தனர். அவை முறைப்படி நிறைவேற்றப்படுவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டதும், இன்று(டிச.9) கூடிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், போராட்டக் குழு கலைக்கப்படுவதாக அறிவித்தனர். டிச.11 அன்று தொடங்கி படிப்படியாக விவசாயிகள் டெல்லி எல்லையை காலி செய்ய இருப்பதாகவும் அறிவித்தனர். டிச.11 தினத்தை தங்களது போராட்டத்தின் வெற்றியை போற்றும் தினமாக கொண்டாட இருப்பதாகவும் அறிவித்தனர்.

முன்னதாக இந்த வெற்றிநாளுக்கு டிச.10 அன்று நாள் குறித்திருந்தனர். முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் கோர மரணத்தை அடுத்து, விவசாயிகளின் வெற்றிக் கொண்டாட்ட நாள் டிச.11-க்கு மாற்றப்பட்டுள்ளது.

x