Mi-17 ரக ஹெலிகாப்டருக்கு விபத்துகள் புதிதல்ல


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. தற்போது இந்த விபத்தில் பிபின் ராவத் உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குன்னூர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், 6 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த 2015 பிப்ரவரி 3-ம் தேதி நாகலாந்து மாநிலம் திமாபூர் என்ற இடத்தில், பிபின் ராவத் சீட்டா ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அப்போது, திடீரென ஹெலிகாப்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத் மற்றும் இரண்டு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். எனினும், இந்த விபத்தில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது அவர் பயணித்த Mi-17 V-5 ஹெலிகாப்டர் விபத்து அவரை அவர் உயிரை பறித்துவிட்டது. விபத்துக்குள்ளான Mi-17 V-5 ரக ஹெலிகாப்டர்களுக்கு வரலாற்றில் விபத்துகள் ஒன்றும் புதிதல்ல.

Mi-17 V-5 வரலாறு

1977-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் Mi-8MT என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஹெலிகாப்டர். 1981-ம் ஆண்டு இதன் மேம்பட்ட வடிவமான Mi-17 அறிமுகப்படுத்தப்பட்டது. போக்குவரத்திற்காகவும், போரிடவும் இரண்டு வகையில் இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘பிளாக் ஹாக்’ ஹெலிகாப்டரைவிட விலையில் குறைவான இந்த ஹெலிகாப்டர் பிளாக் ஹாக்கைவிட அதிகமான பயணிகளைச் சுமக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் 13 முதல் 14 போர் வீரர்களை மட்டுமே சுமக்க முடியும் ஆனால் Mi-17 ஹெலிகாப்டரால் 30-க்கும் மேற்பட்ட பயணிகளைச் சுமந்துசெல்ல முடியும். 2008-ம் ஆண்டு இந்த ஒரு காரணத்திற்காகவே தாய்லாந்து விமானப்படை Mi-17 ரக ஹெலிகாப்டர்களை வாங்கியது. ஒரு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வாங்கக் கூடிய விலையில், 3 Mi-17 ஹெலிகாப்டர்களை வாங்கிவிடலாம் என்பதும் இதற்குக் கூடுதல் காரணம்.

அதே 2008-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி இந்தியா ரஷ்யாவிடம் 80 Mi-17 V-5 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் போட்டது, தொடர்ந்து 2010-ம் ஆண்டு மேலும் 59 Mi-17 V-5 ரக ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. 2012 பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படையில் முதன்முதலில் Mi-17 V-5 ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டன.

இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, மெக்சிகோ, வட கொரியா, தென் கொரியா, இலங்கை, மலேசியா, பாக்கிஸ்தான், ஈராக், சீனா, ஆப்கானிஸ்தான் என்று இன்னும் பல நாடுகள் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்திவருகின்றன.

இந்த ஹெலிகாப்டரின் வரலாற்றில் பல வீரதீரமான செயல்கள் இருந்தாலும், கணிசமான அளவிற்கு விபத்துகளையும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் உலகம் முழுக்க சந்தித்துள்ளன. அவற்றுள் சில...

  • 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி அப்போதைய இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் எம்.ஹெச்.எம். அஷ்ரஃப் பம்பலபிடியா என்ற இடத்திலிருந்து Mi-17 V-5 ரக ஹெலிகாப்டரில் கிளம்பினார், கிளம்பிய 40 நிமிடத்தில் அந்த ஹெலிகாப்டருக்கும் விமானதளத்திற்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பிறகு பைபிள் ராக் காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் உருக்குலைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை கமிஷன் அமைத்தும் இதுவரை விபத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

  • 2003-ம் ஆண்டு போ டிசம்பர் மாதம் போலாந்து நாட்டின் பிரதமர் லெஸ்செக் மில்லர் பயணித்த Mi-8 ரக ஹெலிகாப்டர் விபத்துள்ளானது. இதில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  • 2005-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தெற்கு சூடானின் அதிபர் ஜான் காரங், உகாண்டா அதிபர் யோவெரி முசெவெனியை சந்தித்துவிட்டு Mi-17 ரக ஹெலிகாப்டரில் திரும்பும்போது விபத்துக்குள்ளாகி அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.

  • 2009-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆப்கான் நாட்டின் மேஜர் ஜெனரல் உட்பட 13 பேர் பயணித்த Mi-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிப் பயணித்த 13 பேரும் இறந்தனர்.

  • 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னல் உட்பட 12 இந்தியப் போர்வீரர்கள் பயணித்த Mi-17 ரக ஹெலிகாப்டர் பொம்டில்லா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. பயணம் செய்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  • 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி வடைந்தியாவின் ஜாம்நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானதில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

  • 2013-ம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய உத்ரகாண்ட் வெள்ளத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த Mi-17 V-5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த ஐந்து விமானப்படை வீரர்கள், ஆறு இந்தோ-திபெத்திய எல்லைப் படை வீரர்கள், ஒன்பது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் என இருபது பேர் உயிரிழந்தனர்.

இதுமட்டுமல்லாமல் உலகம் முழுக்க இன்னும் பல விபத்துகளை Mi-17 மற்றும் அதன் முந்தைய மாடலான Mi-8 ரக ஹெலிகாப்டர்கள் சந்தித்துள்ளன.

x