பிபின் ராவத்: முடிவுக்கு வந்த வீர சரித்திரம்!


முப்படைகளின் தளபதி பிபின் ராவத், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துவிட்டார். ராணுவக் குடும்பத்திலிருந்து வந்து, இந்திய ராணுவத்தின் மிக உயரிய பொறுப்பை வகித்த பிபின் ராவத்தின் மரணம் இந்தியாவுக்குப் பேரிழப்பு.

வீரமும் அறிவும்

1958-ல் உத்தராகண்டில், மலைகள் சூழ்ந்த இடமான பாவுரி எனும் கிராமத்தில் பிறந்தவர் பிபின் ராவத். அவரது உறவினர்கள் பலர் ராணுவத்தில் உயர் பதவி வகித்தவர்கள். அவரது தந்தை லக்‌ஷ்மண் சிங் ராவத், லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தவர். எனவே, எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர வேண்டும் எனும் எண்ணம் இளம் வயதிலேயே பிபின் ராவத்துக்கு இருந்தது.

உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள கேம்ப்ரியன் ஹால் பள்ளியில் படித்த ராவத், பின்னர் சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியில் பயின்றார். கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியிலும் படித்தார். ராணுவ அகாடமியில், ‘கவுரவ வீர வாள்’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெறுவது மிகக் கடினமானது. மிக உறுதியும் திடச் சிந்தனையும் கொண்டவர்களுக்கே அது வழங்கப்படும் என்பதால், பிபின் ராவத்துக்குக் கிடைத்த அந்த விருது அவரது பெருமையை உணர்த்துகிறது.

வீரத்தில் மட்டுமல்ல, அறிவிலும் சிறந்தவராகத் திகழ்ந்தார் ராவத். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் படித்தவர் ராவத். பின்னர் அமெரிக்காவின் கன்ஸாஸ் மாநிலத்தின் லெவன்வொர்த் கோட்டை பகுதியில் உள்ள ஆர்மி கமாண்ட் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் கல்லூரியிலும் ராணுவ உயர் கல்வி கற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் கணினி ஆய்வுகளில் டிப்ளோமா பட்டம் பெற்ற ராவத், 2011-ல் மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

வெற்றிகரமான ராணுவ வாழ்க்கை

1978 டிசம்பர் 16-ல் 11-வது கூர்க்கா ரைஃபிள்ஸ் படையின் 5-வது பட்டாலியனில் ராவத் சேர்ந்தபோது, அதே பட்டாலியனில் அவரது தந்தை லக்‌ஷ்மண் சிங் ராவத்தும் பணியாற்றிவந்தார். இரண்டாவது லெப்டினன்டாகத் தனது ராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய ராவத், சீரான இடைவெளியில் அதில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டார். ராணுவத்தின் பல்வேறு படைகளில் பணியாற்றினார். பல விருதுகளையும் வென்றார்.

1980-ல் லெப்டினன்ட், 1984-ல் கேப்டன், 1989-ல் மேஜர், 1998-ல் லெப்டினன்ட் கர்னல், 2003-ல் கர்னல், 2007-ல் பிரிகேடியர், 2011-ல் மேஜர் ஜெனரல், 2014-ல் லெப்டினன்ட் ஜெனரல் என உயர்ந்தார். 2017-ல் தரைப்படையின் தலைமை தளபதியாக இருந்தார். 2019 டிசம்பரில் முப்படைகளின் தளபதி என உயர்ந்தார். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் முப்படைகளுக்கும் பொதுவான தலைவர் எனும் பதவி உண்டு. இந்தியாவில் இந்தப் பதவி உருவாக்கப்பட்டது இதுதான் முதன்முறை. பெருமைக்குரிய அந்தப் பதவி ராவத்துக்குத்தான் கிடைத்தது.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தவர் எனப் புகழ்பெற்றவர் ராவத். காஷ்மீரில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். காஷ்மீரின் உரி பகுதியில், மேஜராகப் பணியாற்றியவர். 2015-ல் மியான்மர் எல்லை அருகே, என்.எஸ்.சி.என் (கே) அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை, ராவத் மேற்பார்வையின் கீழ் நடந்தது. 2016-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த துல்லியத் தாக்குதலையும், டெல்லியில் இருந்தபடியே தனது கண்காணிப்பின் கீழ் வெற்றிகரமாக நடத்தினார். அவரது தலைமையின்கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் உறுதியாகச் செயல்பட்டது எனப் பாராட்டப்படுகிறது. காங்கோ நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐநா சார்பில் அமைக்கப்பட்ட அமைதிப் படையில், பன்னாட்டுப் படைக்குத் தளபதியாக இருந்தார்.

சர்ச்சைக்குரிய கருத்துகள்

சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்காகவும் அறியப்பட்டவர் பிபின் ராவத். அரசியல் சார்பு கருத்துகளையும் தயங்காமல் பேசக்கூடியவர். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை, சாணக்கிய நீதியை முக்கியமானதாகக் கருதியவர். அது ராணுவ எல்லைகளையும் தாண்டி, அவரது அரசியல் பார்வையை விஸ்தரிக்கக் காரணமாக இருந்தது எனச் சொல்லலாம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை விமர்சித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராவத், “பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பயிலும் பல மாணவர்கள், நகரங்களிலும் சிறுநகரங்களிலும் கும்பலாகச் சேர்ந்து தீவைப்பதிலும் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். (அரசியல்) தலைமை இப்படி இருக்கக்கூடாது” என்று பேசினார். கூடவே, உண்மையான தலைவர்கள் மக்களைச் சரியான திசையில் வழிநடத்திச் செல்வதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, “ராணுவத்தின் தலைவர் நீங்கள். உங்கள் வேலையைப் பாருங்கள். அரசியல் தலைவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்களே செய்துகொள்வார்கள். எவ்வாறு போர் புரிய வேண்டும் எனச் சொல்வது எப்படி எங்கள் வேலை இல்லையோ, அதேபோல் அரசியல் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ராணுவத்தின் வேலை அல்ல” என்று கடுமையாக விமர்சித்தார் ப.சிதம்பரம்.

எனினும், ராவத்தின் கருத்தை, முன்னாள் ராணுவத் தளபதியும் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவருமான வி.கே.சிங் ஆதரித்தார்.

ராணுவக் கண்ணோட்டம்

பாகிஸ்தானைவிடவும், சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என ராவத் சொன்னது சர்வதேச அளவில் பேசப்பட்டது. “பாகிஸ்தானுடன் சீனா கொண்டிருக்கும் உறவும், காஷ்மீர் விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடும், இந்தியாவுக்கு எதிரான (அந்நாடுகளின்) பிணைப்பை மிகத் தெளிவாக உணர்த்துபவை எனக் கருதலாம்” என்றும் கூறியவர் ராவத். 2019-ல் அஜெண்டா ஆஜ் தக் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, “பாகிஸ்தானை நாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. பாகிஸ்தான் தனக்குத்தானே கட்டுப்பாட்டை இழந்துவருகிறது. அந்நாடு தற்கொலை எண்ணத்தில் இருக்கிறது” என்று பேசி அதிரவைத்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த நிலையில், ஆப்கனிலிருந்து பயங்கரவாதச் செயல்கள் வெளிப்பட்டால், உறுதியான பதிலடி தரப்படும் என எச்சரித்தார். தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பது இந்தியா எதிர்பார்த்ததுதான் என்றாலும், அது விரைவாக நடந்ததை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த ராவத், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மனநிலையில்தான் தாலிபான்கள் இருப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். அவரது கூற்று சரிதான் என்பதை அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பங்கள் உணர்த்தின.

எல்லையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராவத், அவற்றை எதிர்கொள்ள இந்திய ராணுவத்துக்கு உயர் தொழில்நுட்பங்களின் தேவை குறித்து வலியுறுத்திவந்தார். “நமது எதிரிகள் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், நாமும் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம்” என அவர் கூறினார்.

ராணுவத் தலைமைத் தளபதியாக ராவத் இருந்தபோது, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடைகளின் தரம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. அப்போது, “உணவு, பதவி உயர்வு உள்ளிட்ட எந்த குறைகளாக இருந்தாலும் வீரர்கள் அதை தெரிவிக்க ராணுவ தலைமை அலுவலகங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்படும். தங்கள் குறைகளை வீரர்கள் அதில் தயக்கம் இல்லாமல் தெரிவிக்கலாம்’’ என்று பிபின் ராவத் அறிவித்தார். பெண்கள் குறித்து பிற்போக்கான கருத்து கொண்டவர் என்றும் விமர்சனங்கள் உண்டு. தன்பாலின உறவாளர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்று கண்டிப்புடன் கூறியவர்.

உயர் பதவியில் இருந்த நிலையிலும் எளிமையாகப் பழகும் தன்மையும் கொண்டிருந்தார். 2019-ல் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த ராவத், அங்கு தனது உறவினர்களையும் ஊர் மக்களையும் சந்தித்துப் பேசினார். தனது சொந்த ஊரில் ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனும் விருப்பமும் அவருக்கு இருந்தது. அதுதொடர்பாகத் தனது உறவினர்களிடம் அவர் பேசியிருந்தார்.

தனது சொந்த ஊரில் ஓய்வெடுக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம். அது கனவாகவே முடிந்துவிட்டது.

x