ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே பலி? - தீயணைப்பு வீரர்கள் தகவல்


நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அத்தனை பேருமே உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்துக்குச் சென்றபோது, வெலிங்டன் பயிற்சி கல்லூரியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

24 பேர் வரை பயணம் செய்யக்கூடிய விபத்துக்குள்ளான இந்த Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில், முப்படைத் தலைமை தளபதி, அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி, வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கோவையிலிருந்து மருத்துவர்கள் குழு குன்னூர் விரைந்துள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருந்த போதிலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

விபத்து பகுதியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், எஸ்பி ஆஷிஸ் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணசாமி

இந்நிலையில், விபத்தை நேரில் பார்த்த கிருஷ்ணசாமி மற்றும் சந்திரகுமார் கூறும் போது, “நஞ்சப்பா சத்திரம் பகுதியில் காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. 12 மணியளவில் பெரும் வெடி சப்தம் கேட்டது. ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீ பிடித்து எரிந்தது. பலரின் அலறல் சப்தம் கேட்டது. பொதுமக்கள் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தோம். பின்னர் தீயணைப்புத் துறை, போலீஸூக்கு தகவல் அளித்தோம்” என்றனர்.

சந்திரகுமார்

கே.குமார் மற்றும் ச.ராமச்சந்திரன்

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் உதகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தகவல்:

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கே.குமார் மற்றும் ச.ராமச்சந்திரன் கூறும் போது “ராணுவ உயர் அதிகாரிகள் ராணுவ மையத்துக்கு வருவதால் வெலிங்டன் ஜிம்கானா பகுதியில் பணியிலிருந்தோம். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டோம். இருவரை உயிருடன் மீட்டோம். ஒருவருக்கு 40 சதவீதமும், ஒருவருக்கு 90 சதவீதம் தீ காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பிறரை சடலமாகவே மீட்க முடிந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் உயிரிழந்துள்ளனர். இதைவைத்துப் பார்க்கையில், விபத்தில் சிக்கிய அனைவருமே பலியாகிவிட்டதாகவே தெரிகிறது” என்றனர்.

x