இயந்திரக் கோளாறே குன்னூர் விபத்துக்குக் காரணம்! - எஸ்டேட் தொழிலாளர்கள்


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், ஹெலிகாப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே விபத்து நடந்திருக்க வேண்டும் என விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரும் வழியில் குன்னூருக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காட்டேரி என்னும் பகுதி. இங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் தான் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. குடியிருப்பு பகுதிக்கு சுமார் 200 மீட்டர் தொலைவில் தான் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விழுந்திருக்கிறது. எனினும் ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததால் யாரும் முதலில் அருகில் செல்ல அச்சப்பட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து அங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்கள் சிலர் காமதேனுவிடம் பேசுகையில், “இந்த இடத்திலிருந்து ஆகாய மார்க்கமாக பார்த்தால் இன்னும் ஒரு 5 கிலோ மீட்டர் தொலைவில் விமான இறங்குதளம் இருக்கிறது. அதனால் வழக்கமாக இந்தப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பறந்து கொண்டு தான் இருக்கும். இந்தப் பகுதி உயரமான மலைப் பகுதி என்பதாலும் உயரமாக வளர்ந்த பைப்ரஸ் மரங்கள் அதிகமாக உள்ளம் பகுதி என்பதாலும் பொதுவாகவே இந்தப் பகுதியில் விமானங்கள் தாழப்பறக்காது. மிஸ்ட் இருக்கும் பகுதி என்பதால் பெரும்பாலும் விமானங்கள் பறக்கும் சத்தம் மட்டும் தான் எங்கள் காதில் விழும்.

இன்றும் இந்தப் பகுதியில் மிஸ்ட் அதிகமாக இருந்தது. அதனால் ஹெலிகாப்டர் பறந்ததை நாங்கள் யாரும் கண்ணால் பார்க்கவில்லை. அது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்த சத்தம் கேட்டுத்தான் அந்தப் பகுதிக்கு ஓடினோம். இருந்தாலும், ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததால் மேலும் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் எங்களுக்கு. அதனால் உடனே அருகில் யாரும் செல்லவில்லை. தீயணைப்புத் துறையினர் வந்து சேர்ந்த பிறகுதான் நாங்கள் அச்சமில்லாமல் அந்த இடத்துக்குச் செல்லமுடிந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதை நாங்கள் பார்த்தோம். மற்றவர்களைப் பற்றிய விவரம் எதும் உடனடியாகத் தெரியவில்லை. ஹெலிகாப்டர் மரத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு. இயந்திரக் கோளாறு ஏற்பட்டு அதன் மூலம் ஹெல்காப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என்று சொன்னார்கள்.

x