குன்னூர்: விபத்துக்குள்ளானோர் மீண்டுவர பல்வேறு மாநில முதல்வர்கள் பிரார்த்தனை


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் மரங்களில் மோதி இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத்தும் பயணித்தார். எல்.எஸ்.லிடர், ஹர்ஜிந்தர் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சாட்பால், குருசேவாக் சிங் என மொத்தம் 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். எனினும், உயிரிழந்தவர்கள் யார் யார் எனும் விவரம் வெளியாகவில்லை.

இந்நிலையில், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், அசாம் முதல்வ ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் போன்றோர் ஆழ்ந்த கவலை தெரிவித்திருப்பதுடன், விபத்துக்குள்ளானவர்கள் மீண்டுவர பிரார்த்திப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்திருப்பதாகக் கூறியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்புப் பணிகளைப் பார்வையிட கோவை விரைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து நீலகிரி செல்கிறார் முதல்வர்.

பாதுகாப்புத் துறை அமைச்ச ராஜ்நாத் சிங்கின் உத்தரவையடுத்து, விமானப் படைத் தலைமைத் தளபதி விவேக் ராம் சவுத்ரியும் சூலூர் விமானப் படைத் தளத்துக்கு விரைகிறார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் ராஜ்நாத் சிங்கின் இல்லத்துக்குச் சென்று அவரது மகன், மகளிடம் தற்போதைய நிலவரத்தை விளக்குகிறார் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

x