குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்தது உறுதி


வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராணுவ உயரதிகாரிகள், பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்தது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்திய விமானப் படை இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறது.

இன்று அதிகாலை குன்னூர் அருகே நடந்த இந்த விபத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் பணியில் 15 பேர் கொண்ட ராணுவப் படைகள் ஈடுபட்டிருக்கின்றன.

‘‘தமிழகத்தின் குன்னூர் அருகே சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஐஏஎப் எம்-17வி5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’

ஹெலிகாப்டர் தள்ளாட்டத்துடன் பறந்துவந்ததாக நேரில் கண்ட ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்த விபத்துக்குத் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருக்கும் என ராணுவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனினும், இதுதொடர்பாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

விபத்து குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்புப் பணிகளைப் பார்வையிட கோவைக்கு விரைகிறார்.

x