எது உண்மையான காங்கிரஸ்?


இன்றைய தேதியில், பாஜகவினரைவிடவும் காங்கிரஸைக் கடுமையாக எதிர்ப்பவர், காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸைத் தொடங்கிய மம்தா பானர்ஜிதான். இந்நிலையில், தனது கட்சிதான் உண்மையான காங்கிரஸ் என தேசிய அளவில் நிறுவுவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பாஜகவின் பிடியில் சிக்கவிருந்த மேற்கு வங்கத்தை மீட்டெடுத்த தலைவராக அகில இந்திய திரிணமூல் காங்கிரஸின் நிறுவனருமான மம்தா பானர்ஜி கருதப்படுகிறார். தனது கல்லூரிக் காலத்தில் காங்கிரஸிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய மம்தா 1984-ல் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை மக்களவைத் தேர்தலில் தோல்வியுறச் செய்து புகழடைந்தவர். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களிடம் உருவான கருத்து மோதலால் அக்கட்சியிலிருந்து 1997-ல் வெளியேறி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.

மக்களவைக்கு ஆறு முறை எம்.பியாகத் தேர்வான மம்தா மேற்கு வங்க மாநில அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். இதன் பலனாக அம்மாநிலத்தில் 35 வருடம் நீட்டித்த இடதுசாரி கட்சிகள் ஆட்சியை வீழ்த்தி முதல்வரானார். பிறகு அங்கு வளர்ந்துவிட்ட பாஜகவை ஆட்சிக்கு வர முடியாமல் தற்போதைய தேர்தலில் தோல்வியுறச் செய்துள்ளார். இந்த வெற்றிக்குப் பின் முதல்வர் மம்தா தேசியத் தலைவராக தம்மை முன்னிறுத்தத் தொடங்கி உள்ளார். இதற்கு அவரது தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்துத் கொடுத்து வருகிறார்.

இதன், முதல் கட்டமாக மூன்றாவதாக ஒரு தேசியக் கூட்டணி அமைக்க முயன்றார் மம்தா. இதற்காக, கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பைக்கு நேரில் சென்று எதிர்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். அவர் மீது காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். முக்கிய எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவரான தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாரிடமிருந்து மம்தாவிற்கு அதிக வரவேற்பு இல்லை. எனவே, மம்தாவிற்கு காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைப்பதில் பெரிய வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. இச்சூழலில், தனது கட்சியே உண்மையான காங்கிரஸ் என முன்னிறுத்துவதில் அவர் தீவிரம் காட்டிவருகிறார்.

திரிணமூல் காங்கிரஸின் அதிகாரபூர்வ இதழான ‘ஜாகோ பங்ளா’ நாளிதழில், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கருத்துகள் வெளியிடப்படுகின்றன. பழம் கட்சியான காங்கிரஸின் கலாச்சாரத்தை தற்போது திரிணமூல் காங்கிரஸில் மட்டுமே பார்க்க முடிவதாகவும்; காங்கிரஸின் பெரும்பாலான தொண்டர்களும் இதை ஏற்பதாகவும் அந்நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக, காங்கிரஸிலிருந்து சமீபத்தில் வெளியேறிய பல தலைவர்கள் திரிணமூல் கட்சியில் ஐக்கியமானதை அந்நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பாக, ‘காமதேனு’ இதழிடம் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாக விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஆரம்பகாலத்தில் பிராந்தியக் கட்சிக்கு உரிய வகையில் விதிமுறைகள் இருந்தன. இதற்குப் பதிலாக நாட்டின் அனைத்து மாநிலங்களின் தேர்தலிலும் போட்டியிடும் வகையில் சட்ட திட்டங்களை மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை மேற்கு வங்க மாநிலப் பகுதியை சேர்ந்த 21 பேருக்கு மட்டும் நிர்வாகத்தில் இடமளிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தியாவின் கடைக்கோடி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் நிர்வாகிகளாக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன” எனத் தெரிவித்தனர்.

மத்திய தேர்தல் ஆணையத்தால் திரிணமூல் காங்கிரஸிற்கும் தேசிய கட்சி அந்தஸ்து பல வருடங்களுக்கு முன்பாகக் கிடைத்திருந்தது. இது, தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த அந்தஸ்தை மீண்டும் பெறும் முயற்சியிலும் திரிணமூல் காங்கிரஸ் தீவிரம் காட்டிவருகிறது. இதற்கேற்ற பல திட்டங்களையும் பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து மம்தா வகுத்து வருகிறார். இதில் முக்கியமாக, தம் கட்சியை தேசிய அளவில் முன்னிறுத்தும் வகையில் பொருத்தமானதாகப் புதிய பெயர் வைக்கலாமா எனவும் யோசிக்கத் தொடங்கி உள்ளார்.

எனவே, 2024 மக்களவைத் தேர்தலின்போது, திரிணமூல் காங்கிரஸ் தான் உண்மையான காங்கிரஸ் என்ற கருத்து முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பாக காங்கிரஸின் வேறு பல மூத்த தலைவர்களையும் தம் கட்சிக்குள் இழுக்கும் முயற்சியை மம்தா தொடங்கிவிட்டதாகவும், அதிருப்தித் தலைவர்களுடன் இதுகுறித்துப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தி குடும்பத்தினருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு உருவாகியுள்ள கருத்து வேறுபாடுகளை வைத்து காய்நகர்த்தப்படுவதாகத் தெரிகிறது.

தம் கட்சியைக் குறிவைக்கும் மம்தாவை எதிர்கொள்ளவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. பாஜகவுடன் பல முறை கைகோத்தவருக்கு உண்மையான எதிரி காங்கிரஸா அல்லது பாஜகவா என்பதை மம்தா போன்றவர்கள் விளக்க வேண்டும் எனவும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகள் இடையே நிலவிய இதுபோன்ற பிளவுகள்தான் பாஜகவை மேற்கு வங்க மாநிலத்திலும் வளர்த்திருந்தன. இந்த நிலை 2024 மக்களவைத் தேர்தலில் வலுக்கும் எனில், பாஜகவின் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என்றே சொல்லலாம்!

x