கேஜ்ரிவால் களத்தில் சிக்ஸர் அடித்த சித்து!


கடந்த சில மாதங்களாகவே, பஞ்சாபில் உள்ள பள்ளிகளின் தரம் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் ஏதேனும் புகார்களைச் சொல்லி வருகிறார்கள். அம்மாநில ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் போராட்டங்களில் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற ஆஆக தலைவர்கள் பங்கேற்பார்கள்.

சமீபத்தில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் சொந்தத் தொகுதியான சம்கார் சாஹிபில் உள்ள பள்ளிகளைப் பார்வையிட்டு, அவற்றின் குறைபாடுகள் குறித்து குற்றப்பத்திரிகை வாசிக்கும் அளவுக்கு எகிறினார் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ராகவ் சட்டாவும், சம்கார் சாஹிபுக்குச் சென்று, அங்கு சரண்ஜீத் சிங்கின் ஆதரவுடன் மணல் திருட்டு நடப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கிறது பஞ்சாப் காங்கிரஸ். ஆம்! இன்று டெல்லியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி தற்காலிக ஆசிரியர்கள், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக்கு முன்னால் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு சிக்ஸர் அடித்திருக்கிறார் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து.

‘டெல்லியின் கல்வி எங்கே? கேஜ்ரிவால் எங்கே?’ என்று ஆசிரியர்கள் முழங்க, சித்துவும் அவர்களுடன் சேர்ந்து குரல் எழுப்பியிருக்கிறார். ‘டெல்லியின் கல்வியே இங்கே இருக்கிறது. கேஜ்ரிவால் எங்கே?’ என்று இன்னும் ஆவேசத்தின் அளவைக் கூட்டி முழக்கமிட்டார் சித்து.

டெல்லி பள்ளிகளின் தரத்தை உயர்த்தியதாகப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் அதையும் ஒரு அம்சமாக முன்வைக்கிறது. இந்நிலையில், அதை அடித்து நொறுக்கும் வேலைகளில் பஞ்சாப் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது.

“டெல்லியில், 20 புதிய கல்லூரிகள் திறக்கப்படும், 8 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றெல்லாம் 2015 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தீர்களே, அவை எங்கே? 440 வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்கியிருக்கிறீர்கள். 5 வருடங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் 5 மடங்கு அதிகரித்திருக்கிறது” என்று ட்விட்டரிலும் ஆஆக-வை வாரியிருக்கிறார் சித்து. “டெல்லி ஆசிரியர்கள் கொத்தடிமைகளாகவும் அன்றாடக் கூலிகளாகவும் நடத்தப்படுகிறார்கள்” என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உட்கட்சிப் பூசல்களைப் பயன்படுத்திக்கொண்டு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் முயற்சியில் ஆஆக இறங்கியிருக்கிறது.

இப்படி ‘ஸ்டேட் விட்டு ஸ்டேட்’ சென்று ஆய்வு நடத்தி அரசியல் செய்வது ஆஆகவின் பாணி. இதில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மட்டுமல்ல, பாஜக ஆளும் மாநில அரசுகளையும் பங்கம் செய்வதை அக்கட்சியினர் ஒரு வழிமுறையாகப் பின்பற்றுகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேச மருத்துவமனைகள் குறித்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி, ரே பரேலியில் கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

உத்தர பிரதேசத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று கேஜ்ரிவால் அறிவித்ததைத் தொடர்ந்தே, இந்த மோதல் இன்னும் உக்கிரமடைந்தது. ஆஆக சட்டப்பேரவை உறுப்பினர்கள், உத்தர பிரதேச அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் போன்றவற்றைப் பார்வையிடுவதுடன், தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுக்கூட்டங்களையும் நடத்தினார்கள். இந்த முறை அதையே பஞ்சாப் ஆளும் கட்சியான காங்கிரஸிடம் செய்துபார்த்தார்கள். ஆனால், சித்து அதே பாணியில் டெல்லியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

x