ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு துறவியான கிருஷ்ண பக்தை


பாரதி அரோரா

பதவி, புகழ், பணம், குடும்பம் என அனைத்தையும் துறந்துவிட்டு, ஆன்மிகப் பணியில் இறங்குவது அத்தனை எளிதல்ல. எனினும், எத்தனையோ மகான்கள் அப்படி அனைத்தையும் துறந்து துறவிக்கோலம் பூண்ட வரலாறு நிறைந்தது நமது நாடு. அந்த வகையில், புகழ்பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியால், உயர் பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டிருக்கிறார்.

1998-ல் நடந்த குடிமைப்பணி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரியானவர் பாரதி அரோரா. ஹரியாணா மாநில காவல் துறை அதிகாரியாக இருந்த இவர், கடைசியாக, அம்பாலா பகுதியின் ஐஜியாக இருந்தார். தீவிர கிருஷ்ண பக்தையான பாரதி, பணியிலிருந்து விலகி துறவியாக விரும்புவதாகத் தொடர்ந்து பேசிவந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, மதுராவில் துறவுக்கோலம் பூண்டிருக்கிறார். தனது பெயரை ‘கிரிதர் கோபால்’ என்றும் மாற்றிக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பாரதி அரோரா வெளியிட்ட அறிக்கையில், “மிகவும் விரும்பி நான் செய்த பணி எனது பெருமையாகும். இனி நான் வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளை அடைய விரும்புகிறேன். இதற்காக, புனிதர்களான குருநானக் தேவ், சைதன்ய மகாபிரபு, கபீர்தாஸ், துளசிதாஸ், மீராபாய் மற்றும் சூபிக்களின் வழியில் எனது எஞ்சிய வாழ்வை கடவுள் கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

தனது 23 வருட பணியில் பாரதி, பல முக்கிய வழக்குகளை விசாரணை செய்துள்ளார். அதில், டெல்லியிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் செல்லும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு முக்கியமானது. பஞ்சாபின் பானிபத் அருகே 2007 பிப்ரவரி 18-ல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 68 பேர் பலியாகினர். இதில், பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள். 2009-ல் அம்பாலா மாவட்ட எஸ்பியாக இருந்த இவர், அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் அதன் எம்எல்ஏவான அனில் விஜ் என்பவரைக் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அனில் விஜ், தற்போது பாஜக ஆளும் ஹரியாணாவின் உள் துறை அமைச்சராக உள்ளார்.

ஹரியாணா உள் துறை அமைச்சர் அனில் விஜ்

விருப்ப ஓய்வு தற்போது ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், உத்தர பிரதேசம் மதுரா வந்தடைந்துள்ளார் பாரதி அரோரா. தெய்விக நகரமான இது, இந்துக்களின் கடவுளான கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. இங்கு நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்திருக்கிறார் பாரதி. இவ்வளவு காலம் தனது ஒரே மகனின் பொறியியல் பட்டப் படிப்புக்காகக் காத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது இந்த முடிவுக்கு, கணவரான ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் அரோரா மற்றும் சகோதரி துணை புரிந்ததாகவும் கூறுகிறார். நாட்டில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி துறவறம் பூணுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

x