பள்ளி மாணவிகளுக்கு தவறுதலாக கரோனா தடுப்பூசி!


மாதிரி படம்

கேரளாவில் 10-ம் வகுப்பு மாணவியர் இருவருக்கு, தவறுதலாக கரோனா தடுப்பூசிகள் போட்டப்பட்டதில் அவர்கள் இருவரும் மருத்துவமனை சிகிச்சைக்கு ஆளாகியுள்ளனர்.

திருவனந்தபுரம் அருகே ஆரியநாடு அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம்(டிச.2), பதின்மவயது பெண்களுக்கான தடுப்பூசி முகாம் ஒன்று நடைபெற்றது. இதற்காக 10-ம் வகுப்பு பயிலும் 15 வயதாகும் சிறுமியர் இருவர், அந்த மருத்துவமனைக்கு சென்றனர். சிறுமிகள் இருவரும் வழிதவறி, அதே மருத்துவமனையின் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த ராஜி என்னும் செவிலியர், மாணவிகளின் ஐயத்தைச் சரிவர காதில் வாங்காது தடுப்பூசி போட்டிருக்கிறார். அதன் பிறகே விபரம் கேட்டிருக்கிறார். விபரீதம் புரிந்ததும் மருத்துவமனை வளாகம் பரபரப்பானது.

மருத்துவர்களின் கவனிப்பில் ஒரு மணி நேரம் பராமரிக்கப்பட்ட 2 மாணவிகளும் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சற்று நேரத்தில் மாணவிகளுக்கு காய்ச்சல் அதிகரித்ததில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதுடன், தடுப்பூசி தவறுதலாக வழங்கப்பட்டதன் பின்னணி குறித்தும் விசாரிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் முடிவில், தடுப்பூசி வழங்கும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக, செவிலியர் ராஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, மாநிலம் நெடுக கரோனா தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் கவனமாக செயல்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து கூடுதல் ஆய்வுகள், வழிகாட்டுதல்களை வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

x