இவர்களை சஸ்பெண்ட் செய்த பின்னர்தான் சட்டப்பேரவைக்குச் செல்வேன்!


பிஹார் சட்டப்பேரவை வளாகத்துக்குள் தனது காரை மறித்த போக்குவரத்துக் காவலரை, அம்மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா கடுமையாகத் திட்டும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிஹார் சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 4-வது நாளான இன்று, அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா சட்டப்பேரவைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஏஎன்ஐயின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் காணொலியில், கொந்தளிப்புடன் காணப்படும் அமைச்சர், “நான் அரசாங்கத்தைச் சேர்ந்தவன். என்னிடமே விஷமம் காட்டுகிறார் இவர்” என்று சொல்ல, “நான் கவனிக்கவில்லை” என்று போக்குவரத்துக் காவலர் கூறுகிறார்.

எனினும், காவல் துறை எஸ்.பி, மாஜிஸ்திரேட் போன்றோர் வருவதைக் காரணம்காட்டி அமைச்சரான தன்னையே போக்குவரத்துக் காவலர்கள் நிறுத்திவைத்திருக்கிறார்கள் என்று சொன்ன அவர், “இந்தக் காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த பின்னர்தான் நான் சட்டமன்றம் செல்வேன்” என்று சத்தமிட்டபடி காரில் ஏறிச் சென்றார். எனினும், நேராகச் சட்டமப்பேரவைக்குள் நுழைந்து தனக்கு நேர்ந்த ‘அநீதி’ குறித்து அவையில் எடுத்துரைக்கவும் செய்தார். “அமைச்சர் பெரியவரா அல்லது எஸ்.பி, மாஜிஸ்திரேட் போன்றோர் பெரியவர்களா என்பதை இன்று முடிவுசெய்ய வேண்டும்” என்றும் முழங்கினார். அவருக்கு ஆதரவாக அவரது கட்சியினரும் அவையில் முழக்கம் இட்டனர்.

இதே ஜிவேஷ் மிஸ்ரா, சில மாதங்களுக்கு முன்னர் உயரதிகாரிகளுக்கு ஆதரவாக சமூக நலத் துறை அமைச்சர் மதன் சஹனியுடன் வார்த்தைப் போரில் இறங்கியவர்.

உயரதிகாரிகள் சர்வாதிகாரத்தன்மையுடன் நடந்துகொள்வதாக மதன் சஹனி கூறியிருந்த புகார் தொடர்பாகக் கருத்து தெரிவித்த ஜிவேஷ் மிஸ்ரா, “நான் பொறுப்பு வகிக்கும் துறையில் உயரதிகாரிகளிடம் சர்வாதிகாரத் தன்மை இல்லை. அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் இடையில் முழுமையான ஒருங்கிணைப்பு நிலவுகிறது” என்று சொன்னவர்.

பிஹாரில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜிவேஷ் மிஸ்ரா பாஜகவைச் சேர்ந்தவர். மதன் சஹனி ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x