மம்தாவைத் தொடர்ந்து பிரசாந்த்... காங்கிரஸ் காய்ச்சி எடுக்கப்படுவது ஏன்?


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைக் குறிவைத்து மம்தா தொடுத்த தாக்குதலைத் தொடர்ந்து அடுத்த தாக்குதலை, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் பிரசாந்த் கிஷோர் தொடுத்திருக்கிறார்.

“காங்கிரஸ் பிரதிநிதித்துவம் செய்யும் சித்தாந்தமும், அதற்கான இடமும் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு முக்கியமானதுதான். ஆனால், அக்கட்சியின் தலைமைப் பொறுப்பு ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல” என்று ட்வீட் செய்திருக்கும் பிரசாந்த், கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவீத தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, கோவா, திரிபுரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்களை, திரிணமூல் காங்கிரஸுக்கு இழுத்துவருவதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. கூடவே, பாஜகவுடன் ஒப்பிட்டு காங்கிரஸைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் மீதான அக்கறையில் இப்படியெல்லாம் பேசுகிறாரா அல்லது காங்கிரஸை பலவீனப்படுத்த இப்படி வாருகிறாரா என விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

அதேசமயம், கட்சித் தலைவர் பதவியை ஏற்க ராகுல் முன்வராதது, அவர் முன்வராத பட்சத்தில் தகுதிவாய்ந்த நிரந்தரத் தலைவர் ஒருவரை நியமிக்க கட்சித் தலைமை முன்வராதது போன்றவை காங்கிரஸுக்கு உள்ளும் வெளியிலும் விமர்சனங்களை எழுப்பியிருக்கின்றன. பிரசாந்த் போன்றோரின் கருத்துகள் அதைத்தான் உணர்த்துகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் வேண்டும் என்றும் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் ஜி23 தலைவர்கள் வலியுறுத்திவந்தனர். அதை முன்வைத்து கட்சிக்குள் பல குழப்பங்கள் நிகழ்ந்த நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2022 ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், அதற்குள் உத்தர பிரதேசம், பஞ்சாப் போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலைக் காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை, பிரியங்கா காந்தியே கவனித்துக்கொள்ளட்டும் என்று ராகுல் காந்தி விட்டுவிட்டதாகவே தெரிகிறது. இதனால், காங்கிரஸை வெற்றிபெற வைக்கும் முனைப்பு அவரிடம் இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதன் ஒரு பகுதிதான் பிரசாந்த் கிஷோரின் இந்த ட்வீட்.

இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. பாஜகவில் ஒரு கட்டத்தில் வாஜ்பாயின் தலைமையில் சுணக்கம் இருப்பதாகப் பேசப்பட்டபோது, அத்வானியின் கரம் வலுப்படுத்தப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் தோல்வியடைந்தபோது, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அத்வானியின் வியூகத்தில் இருந்த குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்வானியைவிடவும் மோடிதான் பாஜகவை வெற்றிபெற வைக்க சரியான ஆள் எனும் பேச்சு எழுந்தபோது, அதுவும் அக்கட்சியில் சாத்தியமானது.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாமலும், மாறிவரும் சூழலுக்கு முகங்கொடுக்காமலும் இருப்பது அக்கட்சி தொடர்பான எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்றும், அது தேர்தல்களில் எதிரொலிக்கக்கூடும் என்றும் காங்கிரஸ் அபிமானிகள் கவலைப்படுகிறார்கள்.

x