உருமாறிய ஒமைக்ரான்: கவலைகளும் தெளிவுகளும்


இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனபோதும், உருமாறிய ஒமைக்ரானை விட வேகமாக அது தொடர்பான அச்சங்களும், கவலைகளும் பரவி வருகின்றன. ஒமைக்ரானுக்கு எதிரான விழிப்புணர்வுக்கு இந்தக் கவலைகளை களையும் வண்ணம் தெளிவு பெறுதலும் அவசியம். அப்படியான அடிப்படையும் அவசியமுமான தெளிவுகளை, எளிமையான கேள்வி பதில் வடிவில் இங்கே பார்ப்போம்.

ஒமைக்ரான் என்பது என்ன?

கரோனாவின் தொடரும் உருமாறிய வடிவங்களில் மற்றும் ஒன்றாக வந்திருப்பதே ஒமைக்ரான். நவ.9 அன்று தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட இதன் பரவல் வேகம் அதிகம் என்பதே, ஒமைக்ரான் மீதான கவலைக்கு அடிப்படையாக உள்ளது.

ஒமைக்ரான் குறித்த கவலை நியாயமானதா?

ஆம். இதுவரையிலான கரோனா வைரஸ்களில் அதிக அளவிலான பிறழ்வுகளுக்கு ஒமைக்ரான் ஆளாகிறது. இதற்கு முந்தைய ஆல்பா வகையில் 2 பிறழ்வுகள் மட்டுமே தென்பட்டன. இந்தியாவில் தற்போது வரை போக்குகாட்டி வரும் டெல்டா வகையில் 8 பிறழ்வுகள் மட்டுமே உள்ளன. ஒமைக்ரானில் இதுவரை அதன் கூர்முனை புரதத்தின் அடிப்படையில் 32 பிறழ்வுகளும், ஏற்பியை பொறுத்து மேலும் 10 பிறழ்வுகளுக்கும் ஆளாகியுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

ஒமைக்ரான் உருமாற்றம் எப்படி நிகழ்ந்திருக்கும்?

நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த மனித உடலே, வைரஸ்கள் உருமாற்றத்துக்கான களமாக மாறுகின்றது. புற்றுநோய்க்காக கீமோ தெரபி சிகிச்சையில் இருப்போர், ஹெச்ஐவி பாதிப்புக்கு ஆளானவர், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பாற்றல் குறைந்திருக்கும். அவர்களின் உடலில் தொற்றிய கரோனா வைரஸ், சற்றே கூடுதலாக அங்கே வாசம் செய்யும்போது பிறழ்வுகள் உருவாக வாய்ப்பாகின்றன.

தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஒமைக்ரான் வருமா?

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தற்போது பரவலில் உள்ள கரோனா பாதிப்பதற்கான வாய்ப்புகள் தாராளமாக உள்ளன. ஒமைக்ரானும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால், ஏற்கெனவே கரோனா தொற்றுக்கு ஆளானவருக்கு குறைந்த அளவிலான பாதிப்புகளையே ஒமைக்ரான் உருவாக்குவதாக தெரிய வருகிறது.

ஒமைக்ரான் பாதிப்பை உறுதி செய்வது எப்படி?

ஜீன் பரிசோதனை அடிப்படையிலான ஆர்டிபிசிஆர் டெஸ்ட் போதுமானது. மண்டலம் வாரியாக தமிழகத்தின் மொத்தம் 12 மருத்துவமனைகளில், பிரத்யேக ஒமைக்ரான் ஆய்வகங்களில் ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஒமைக்ரானிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?

கரோனா ரகங்களுக்கு உரிய அதே பாதுகாப்பு வழிமுறைகள், ஒமைக்ரான் தடுப்புக்கும் பொருந்தும். தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி பேணுவது ஆகியவற்றை முறையாக கடைபிடித்தால், ஒமைக்ரான் மட்டுமல்ல இன்னும் எத்தனை உருமாறிய வைரஸ்கள் தலையெடுத்தாலும் நாம் பாதுகாப்பாக தப்பிக்கலாம்.

தடுப்பூசிகளுக்கு ஒமைக்ரான் கட்டுப்படுமா?

இப்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் அனைத்துமே அவசரகால உபயோகத்துக்காக உருவாக்கப்பட்டவை. ஒமைக்ரான் மட்டுமல்ல இதர உருமாறிய கரோனா வைரஸுக்கு எதிராக, தடுப்பூசிகளால் 100 சதவீத உத்திரவாதம் வழங்கமுடியாது. ஆனால், பகுதி அளவேனும் பாதுகாப்பை இவை உறுதி செய்கின்றன.

தடுப்பூசி 2 டோஸ் பெற்றவர்கள் அனைவரும், அநேகமாக 3-வது டோஸ் ஒன்றைப் போடும் சூழலுக்கு ஒமைக்ரான் தள்ளியுள்ளது. அதற்கான ஆராய்ச்சிகளில் தடுப்பூசி நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன. எனவே, தடுப்பூசி போடாது கோவிட் தாக்குதலை வரவேற்பதைக் காட்டிலும், தடுப்பூசிகள் மூலம் பகுதி அளவு பாதுகாப்பை உறுதி செய்வதே புத்திசாலித்தனம்.

அறிகுறிகள் அதேதானா?

ஆம். தலைவலி, காய்ச்சல், இருமல், வாந்தி, உடல்வலி, களைப்பு என கரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகள் ஒமைக்ரானுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு சிலருக்கு மிக லேசான அறிகுறிகளை மட்டுமே ஒமைக்ரான் காட்டுகிறது. எனவே, அலட்சியம் கொள்ளாது ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவ உதவியை நாடுவது, குணமாக்கல் மட்டுமன்றி குடும்பத்தினர் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும்.

இப்போதைக்கு என்ன செய்வது?

கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுவது அடிப்படையானது. ஒமைக்ரான் பரவல் கண்டறியப்பட்டால், அரசு வழிகாட்டும் புதிய நடைமுறைகளையும் முறையாகச் செவிமெடுப்பது நல்லது. ஒமைக்ரானின் பரவல், வீரியம், அதற்கு எதிரான மருத்துவ சிகிச்சை ஆகிய அனைத்தும் இன்னமும் ஆய்வக அடிப்படையிலே உள்ளன. முழு விவரமும் அறிந்துகொள்ள இன்னும் ஓரிரு வாரங்களேனும் ஆகக்கூடும்.

x