பொறியியல் மாணவர்களுக்கு உடனடி வேலை!


ஜார்க்கண்ட் மாநிலம், சிந்திரியில் உள்ள ‘பிட்’ (BIT) அரசுப் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் 750 பேரில் 550 பேருக்கு வளாக நேர்காணலிலேயே பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டது. மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்புக் குழுவில், இறுதி ஆண்டு மாணவர் மாதவ் இடைவிடாது ஒருங்கிணைத்து இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் என்று கல்லூரி நிர்வாகம் பெருமிதப்படுகிறது.

100 நாடுகளைச் சேர்ந்த 1.50 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் ஆதித்ய பிர்லா குழுமம் 2019-22 ஆண்டுகளில் பி.டெக் படித்த மாணவர்கள் 39 பேரை ஆண்டுக்கு 6.6 லட்சம் ரூபாய் என்ற ஊதியத்தில் வேலைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இவர்களில் 11 பேர் இயந்திரவியல், 8 பேர் வேதிப் பொறியியல், 7 பேர் உலோக உருக்குவியல், கனிமப் பொறியியல், 6 பேர் மின்னியல் பொறியியல் துறைகளில் படித்தவர்கள்.

டெக் மகேந்திரா நிறுவனம் 3 இசிஇ மாணவர்களையும், ஒரு ஐ.டி மாணவரையும் வேலைக்குச் சேர்த்துக்கொண்டுவிட்டது.

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் ஊதியத்தில் இறுதி ஆண்டு மாணவர்கள் 10 பேரை வேலைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. அதில் 3 பேர் இயந்திரவியல், 2 பேர் தகவல் தொழில்நுட்பம், உலோக உருக்குவியல், கனிம அகழ்வியல், கட்டுமானவியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகியவற்றில் தலா ஒருவர் என்று பொறியியல் மாணவர்கள் அடங்குவர்.

விப்ரோ நிறுவனம் 53 பேரை வேலைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. அவர்களில் 10 பேர் வேதியியல், 8 பேர் உற்பத்தியியல், 7 பேர் தகவல் தொழில்நுட்பம், 5 பேர் கனிம அகழ்வியல், 5 பேர் மின்னணுவியல் - தகவல் தொடர்பியல், 4 பேர் கட்டுமானவியல், 4 பேர் இயந்திரவியல், 4 பேர் மின்னியல், 3 பேர் உலோக உருக்குவியல், 3 பேர் கணினி அறிவியல் ஆகிய துறைகளில் படித்த பொறியியல் மாணவர்கள்.

55 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.3.6 லட்சம் ஊதியத்தில் வளாக நேர்காணலில் வேலை பெற்றுள்ளனர்.

கல்லூரியின் பயிற்சி, வேலைவாய்ப்பு அதிகாரி கண்ஷியாம் ராய் இதைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். பிட் சிந்திரியின் இயக்குநர் தர்மேந்திர குமார் சிங் மாணவர்களையும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு தேடித்தந்த குழுவினரையும் பாராட்டினார்.

தமிழகத்திலும் இவ்விதம் மாணவர்கள் வளாக நேர்காணலில் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இதில் தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் மேலும் ஆர்வம் காட்டினால் ஊக்குவிப்பாக இருக்கும். அரசு இதற்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படலாம். அத்துடன் அரசுத் துறைகளுக்குமே நேர்காணலில் மாணவர்களைத் தேர்வுசெய்யலாம்.

x