மீனவர்களை அகதிகளாக்கும் மீன்வள மசோதா!


இத்தனை நாளும் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த ‘இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021’ விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.

நவ.22-ல், டெல்லியில் நடைபெற்ற உலக மீனவர் தினவிழா கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் சிலர் மீன்வள மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேச, பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக மீனவர்கள் இது தொடர்பாக அந்த கூட்டத்தில் தங்களின் கடுமையான ஆட்சேபத்தைப் பதிவு செய்தார்கள். அந்தக் கூட்டத்தின் மேடையில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த மு.தம்பிதுரை, “இம்மசோதா மீனவர்களுக்கு எதிரானது, இதை அதிமுக எதிர்க்கும்” என்று சொன்னார்.

இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், இம்மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், பாஜகவின் தோழமைக் கட்சியான அதிமுகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது.

இம்மசோதாவுக்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டதிலிருந்தே மீனவர்கள் மிகக்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலநாட்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டங்களை நடத்திவந்தனர். பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் இம்மசோதாவைக் கண்டித்தன. ’மத்திய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளதால், அதை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாம்’ என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் இம்மசோதாவை எதிர்த்துப் பேசியிருக்கின்றனர். இப்படி எல்லாதரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், கடந்த கூட்டத்தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், நடப்புக் கூட்டத்தொடரில் தாக்கலாகும் என்கிறார்கள்.

விவசாயிகளின் 18 மாத கால தொடர் போராட்டத்துக்குப் பணிந்து, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றதைப்போல இந்திய கடல்சார் மீன்வள மசோதாவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்று மீனவர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்துகின்றன. வேளாண் சட்டங்கள் எப்படி விவசாயிகளின் நலனுக்கு எதிரானதோ, அதைவிட அதிகமாக மீன்வள மசோதா பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் அமைந்திருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கடல் மீன் வளங்களை அபிவிருத்தி செய்தல், நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான கட்டமைப்பை உருவாக்கவும், கடலோரப் பகுதிகளில் மீன் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் வேலைவாய்ப்பை உருவாக்கம் செய்வதற்காகவும் இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், இச்சட்டம் மீனவர்களை கடல் பரப்பிலிருந்து ஒட்டுமொத்தமாக அகற்றிவிட்டு, கடலை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிடவே வழிசெய்கிறது என்கிறார்கள் மீனவர்கள்.

இம்மசோதாவின்படி நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான கடல்பகுதி பிராந்தியக் கடல் என்றும், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரை சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ளது பன்னாட்டுக் கடல்பகுதி எனவும் மூன்றாக வரையறுக்கப்படவுள்ளது.

இதில் நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் தொலைவு வரையில் மட்டுமே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்தப் பகுதிகளில் மட்டும்தான் நாட்டுப் படகு, விசைப் படகுகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மீன்களைப் பிடிக்க வேண்டுமெனவும் விதிமுறை குறிப்பிடுகிறது

12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலமானது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தப் பகுதிகளில் மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளிடம் கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்றபிறகே மீன்பிடிக்க இயலும். இதைவிட முக்கியமான இன்னொரு நிபந்தனையும் உண்டு. படகுகள் அனைத்தும் மீன்பிடி உரிமம்பெற, வணிகக் கப்பல் சட்டம் 1958-ன்கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டுமெனில், உரிமம் பெற்ற ஓட்டுநர் ஒருவரும், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் மீன்பிடிக் கலத்தில் இருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறிக் கடலுக்குச் சென்றால், ரூ. 5 லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை மற்றும் மீன்பிடிக்க வாழ்நாள் தடைவிதிப்பு, மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தால் சிறைத் தண்டனை என மீனவர்களைக் குற்றவாளியாக்கும் பல அம்சங்கள் இம்மசோதாவில் உள்ளன. இதை மத்திய அரசின் அதிகாரிகள் தவறுதலாகப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

12 கடல் மைலுக்குள் மீன்பிடிப்பதும் இயலாத காரியம் என்கிறார்கள். வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் சாகர்மாலா, நீலப்பொருளாதரம் ஆகிய திட்டங்களின்கீழ் ஏராளமான கார்ப்பரேட் கம்பெனிகள் கடலை ஆக்கிரமித்திருக்கின்றன. அவைகளால் கடல் வளமே அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றது என்கிறார்கள் மீனவர்கள்.

குமரவேலு

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேசிய மீனவர் பேரவையின் துணைத்தலைவர் டாக்டர் குமரவேலு, ‘’இவ்வளவு காலம் இந்திய கடல் எல்லையைத் தாண்டி அண்டை நாட்டுக் கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்கள் மட்டுமே கைதுசெய்யப்பட்டு, சிறைத் தண்டனைக்கு உள்ளாகிவந்த நிலையில், சொந்த நாட்டுக் கடல் பரப்பிலேயே எல்லை நிர்ணயம் செய்து, சாலையில் சுங்கக்கட்டணம் வசூல்செய்வதுபோல கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கும் கட்டணம் வசூலிக்கும் மோசமான நிலையை இந்த சட்டம் ஏற்படுத்துகிறது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், கடலோர கிராமங்களிலிருந்து படகுகள், சிறுசிறு கப்பல்கள் மூலம் கடலுக்குச் செல்லும் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலைவிட்டேச் செல்லும் அவல நிலை ஏற்படும்.

மீனவர்கள் என்பவர் யார் என்று மசோதாவில் இல்லை. இதன்மூலம், மீன்பிடிக்கும் அனைவரும் மீனவர்கள் என்றநிலை உருவாகும். பன்னாட்டு நிறுவனங்களின் பெரிய கப்பல்கள் சிறப்புப் பொருளாதார மண்டலப்பகுதியில் மீன்பிடிக்க எளிதாக அனுமதி பெறுவார்கள். கடல்பரப்பு அவர்களுக்கு மட்டுமே சொந்தமாகி பாரம்பரிய மீனவர்கள் அகதிகளாகும் நிலை ஏற்படும்” என்று அச்சம் தெரிவித்தார்.

ரவிக்குமார்

இம்மசோதாவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் எம்பி, ’’இம்மசோதாவுக்கான வரைவு முதலில் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனது விழுப்புரம் தொகுதியைச்சேர்ந்த 19 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களைக் கூட்டி அவர்களிடம் அதைக்காட்டி விவாதித்தேன். அவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

லைசென்ஸ் வாங்குவது உள்ளிட்ட எல்லா அம்சங்களுமே தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், இந்தச் சட்டம் வந்தால் தாங்கள் குற்றவாளிகளாக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகவும், கடலை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் வகையில்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

மீனவர்களின் இந்தக் கருத்துகளையும், எதிர்ப்பையும் நானும் எங்கள் தலைவரும் அப்போதே சென்று மத்திய மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்துச் சொன்னோம். வரும் கூட்டத்தொடரில் இம்மசோதா கொண்டு வரப்பட்டால், மீனவர்களின் எதிர்ப்பை அங்கே நாங்கள் பதிவு செய்வோம்” என்கிறார்.

வின்சென்ட் ஜெயின்

கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதி வின்சென்ட் ஜெயின், ‘’காடு எப்படி பழங்குடியினரின் வாழ்வுரிமையாக இருக்கிறதோ, அதைப்போல கடல் மீனவர்களின் வாழ்வுரிமையாக உள்ளது. எங்களின் வாழ்வுரிமையோடு சேர்த்து நாங்கள் கடலை வளப்படுத்தியே வருகிறோம். ஆனால், எங்களை பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு கொண்டுவரப்படும் இச்சட்டம் கடலிலிருந்து முற்றாக எங்களை அப்புறப்படுத்தவே வழிசெய்யும். வேளாண் சட்டங்களைவிட கொடியது இந்தச் சட்டம். அதனால் இந்த மசோதாவில் எத்தகையை மாறுதலும், திருத்தங்களும் செய்யாமல் முற்றாகவே கைவிடவேண்டும். பாரம்பரிய மீனவர்களுக்கான உரிமைப் பாதுகாப்பு சட்டமாக இயற்றப்பட வேண்டும். மற்ற பழங்குடி மக்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, கடல் பழங்குடிகளுக்கும் அதே உரிமைகளையும், பாதுகாப்பையும் மத்திய - மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்” என்கிறார்.

நாராயணன் திருப்பதி

இதுகுறித்துப் பேச மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகனைத் தொடர்பு கொண்டோம். அவர் தொடர் நிகழ்ச்சிகளில் இருப்பதாக உதவியாளர் தெரிவித்தார். அதனால், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

“அதிமுக எதிர்க்கிறது என்றால் மீனவர்களுக்கு இந்த மசோதாவால் என்ன பாதிப்பு என்பதை முதலில் சொல்லட்டும். பல ஆண்டுகாலமாக மீனவர்களுக்கான தனி அமைச்சகம் உட்பட மீனவர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இம்மசோதாவும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை மேம்படுத்தவும், கடல்வளத்தைப் பெருக்கவுமே கொண்டு வரப்படுகிறது. நாடெங்கும் கருத்துகளை கேட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முழுமையான சட்டமாக இது நிச்சயம் நிறைவேற்றப்படும். இதைக் கண்டு மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை” என்று சொன்னார் அவர்.

முந்தைய காலங்களில் மத்திய அரசுகள், இந்தியக் கடல் எல்லைக்குள் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கை (1977), இந்தியக் கடல் மண்டலங்கள் (வெளிநாட்டுக் கப்பல் மீன்பிடி ஒழுங்காற்றுதல்) சட்டம் (1981), வரன்முறைக் கொள்கை (1986) ஆகியவற்றை வெளியிட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இவையனைத்தும் தோல்வியைத் தழுவின. அதேபோல இந்த மீனவள மசோதாவும் ஏற்கெனவே 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வரைவு வெளியிடப்பட்டு, மீனவர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்ட வரலாறும் இருக்கிறது.

கடலோடும் மீனவர்களுக்கான சட்டங்கள், நமது மீன் வளங்களால் அவர்கள் பயனடையும் வகையில் இயற்றப்பட வேண்டுமே தவிர, அவர்களைக் கடலிலிருந்து வெளியேற்றும் ஆயுதமாகிவிடக் கூடாது. புதிதாக சட்டம் இயற்றி சாதிக்க நினைப்பவர்கள், இதையும் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சிதான்.

x