ஒமிக்ரான்: இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை மணி!


புதிய கரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ், பெருந்தொற்றைக் கையாளும் விஷயத்தில் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார். கரோனா கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் அவர், “முகக்கவசம்தான் உங்கள் சட்டைப்பையில் இருக்கும் தடுப்பூசி. உள்ளரங்கங்களில் முகக்கவசம், கரோனா பரவலைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

வயதுவந்தோர் அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடுவது, கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் அவர், “ஒமிக்ரானை எதிர்கொள்ள அறிவியல் அடிப்படையிலான வியூகம் அவசியம்” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“டெல்டா வைரஸைவிடவும் வேகமாகப் பரவக்கூடியது ஒமிக்ரான். இதன் தன்மைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும். இதைப்பற்றி இன்னும் சில நாட்களில் விரிவான தகவல்கள் கிடைக்கும்” என அவர் கூறியிருக்கிறார்.

ஒமிக்ரான் பல்வேறு உருமாற்றங்களுக்கு உட்படக்கூடியது. தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் தேவை என அவர் வலியுறுத்தியிருக்கிறார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்பதால், கரோனா பரவலை எதிர்கொள்ள முடியும் என சில மாதங்களுக்கு முன்னர் நம்பிக்கையுடன் பேசியிருந்த சவுமியா சுவாமிநாதன் இப்போது இப்படி எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விமானப் பயணங்களுக்குத் தடை விதித்திருக்கின்றன. இந்தியாவிலும் இவ்விஷயத்தில் கட்டுப்பாடுகள் தொடங்கியிருக்கின்றன. தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை விமான நிலையம் வந்தடையும் பயணிகள், தனிமைப்படுத்தப்படுவார்கள் என அந்நகர மேயர் கிஷோரி பட்னேகர் கூறியிருக்கிறார். பயணிகளுக்குக் கரோனா உறுதிசெய்யப்பட்டால் அவர்களிடமிருந்து பெறப்படும் மாதிரிகள் மரபணுவரிசை பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா மட்டுமல்லாமல் பிரிட்டன், சீனா, பிரேசில், நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டாயம் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என குஜராத் அரசு அறிவித்திருக்கிறது.

ஒமிக்ரான் மிகக் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது. பெருந்தொற்றுப் பரவலை அதிகரிக்கக்கூடியது; தடுப்பூசிகளையும் எதிர்கொள்ளக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே, கரோனா கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம்.

x