பஞ்சாபில் அரியணை ஏறுமா ஆம் ஆத்மி?


அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் போன்ற கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் பலப்பரீட்சைக்குத் தயாராகியிருக்கிறது. இக்கட்சியின் வெற்றிவாய்ப்பு எப்படி எனும் கள நிலவரங்களும் கருத்துக் கணிப்புகளும் வெளியாகிவருகின்றன.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கும் நிலையில், பஞ்சாபின் அரசியல் களம் பெரிய அளவில் மாற்றமடைந்திருக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பம், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தொடர்பாக மக்களிடம் நிலவும் அதிருப்தி போன்ற காரணிகள் எதிர்க்கட்சிகளை நம்பிக்கையுடன் களமிறங்கச் செய்திருக்கின்றன. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதை வைத்து பாஜகவும், அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்கும். சிரோமணி அகாலி தளம் தனது பலத்தைக் காட்ட பிரம்மப் பிரயத்தனத்தில் இருக்கிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தன்னளவிலான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன்முதலில் பஞ்சாபில் களம் கண்டது ஆம் ஆத்மி கட்சி. அந்தத் தேர்தலில் 20 இடங்களில் வென்றது. எனினும், இன்றைய தேதியில் அந்தக் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11 தான். சிலர் கட்சி மாறிவிட்டனர். சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்குள் குழப்பங்கள் நிலவுகின்றன.

ஏறத்தாழ எல்லாக் கட்சிகளும் முதல்வர் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவுசெய்துவிட்டன. ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக ஒரு சீக்கியர்தான் முன்னிறுத்தப்படுவார் என அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியாகச் சொல்லிவிட்டார். ஆனால், அந்த சீக்கிய முகம் யார் என்பதுதான் இதுவரை முடிவாகவில்லை. ஆம் ஆத்மி கட்சி எம்.பியான பகவந்த் மான், எதிர்க்கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா போன்றோரின் பெயர்கள் அடிபடுகின்றன. எனினும், யாரையும் இப்போதைக்கு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கேஜ்ரிவால் தயங்குகிறார்.

கடந்த முறை பஞ்சாப் மாநிலத்தின் இந்து வாக்காளர்கள், ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரும் ஆதரவு தந்தனர். இந்த முறை சீக்கியரை முன்னிறுத்துவதாக அறிவித்திருப்பதால், ஆம் ஆத்மி கட்சி இந்துக்களின் வாக்குகளை இழக்கக்கூடும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், வாக்காளர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

ஆத் ஆத்மி கட்சியின் வாக்குவங்கி சுருங்கிவருவது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு இருந்த ஆதரவு குறைந்துவருவதாகவே சொல்கின்றன. பஞ்சாப் இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கள நிலவரங்கள் கூறுகின்றன. அந்த மாற்றம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இருக்குமா என்பதை, அக்கட்சியின் அடுத்தடுத்த வியூகங்கள் சொல்லிவிடும்!

x