பாலியல் தொழிலாளர்களை இன்றும் வதைக்கும் பணமதிப்பு நீக்கம்


பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலாகி 5 ஆண்டுகளுக்குப் பின்னரும், அதன் பாதிப்புகள் பல்வேறு தொழில் துறைகளில் தொடர்கின்றன. குறிப்பாக, திரைமறைவில் வாழநேரும் பாலியல் தொழிலாளர்கள் பலர் இன்னமும் தங்களிடமிருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக, ‘பாலியல் தொழிலாளர்களுக்கான தேசிய வலைப்பின்னல்’ எனும் அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்கள் மனதைக் கனக்கச்செய்பவை.

2016 நவ.8-ம் தேதி இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டு, நள்ளிரவிலிருந்து அமலுக்கு வந்தது பணமதிப்பு நீக்க நடவடிக்கை. ரூ.500, 1,000 நோட்டுகள் இனி செல்லாது என மோடி அறிவித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் வங்கிகளில், பழைய நோட்டுகளை மாற்றிப் புதிய நோட்டுகளை வாங்க மக்கள் கூட்டம் முண்டியடித்தது. ஏடிஎம் மையங்கள் முன்பு நீண்ட வரிசை நின்றது.

இந்தச் சூழலில், தங்கள் சேகரிப்பில் இருந்த ரூ.500, 1,000 நோட்டுகளை என்ன செய்வது எனத் தெரியாமல் பாலியல் தொழிலாளர்கள் குழம்பி நின்றனர். மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விக் கட்டணம் எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு அவர்கள் ஆளாகத் தொடங்கினர். தங்கள் உடலை வருத்திச் சேகரித்துவைத்திருந்த பணம் அனைத்தும் ஒரே நாளில் செல்லாக்காசாகிவிட்ட நிலையில், வங்கியில் சென்று நோட்டுகளை மாற்றுவதும் அவர்களுக்குச் சவாலாகவே இருந்தது.

பொதுச் சமூகத்தில் தங்கள் அடையாளத்தை மறைத்து வாழும் பாலியல் தொழிலாளர்கள், பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். வங்கிக் கணக்குடன் பான் எண்ணை இணைக்க வேண்டியிருக்கும் சூழலில், தங்கள் சுயவிவரங்களைக் கொடுக்க விரும்பாதவர்கள் வங்கிக் கணக்கே தொடங்கியிருக்கவில்லை. எனவே, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தைத் தங்கள் அறைகளில்தான் சேமித்துவைத்திருந்தனர். இதனால், பணமதிப்பு நீக்கம் அமலுக்கு வந்த பின்னர், அந்த நோட்டுகளை வங்கியில் சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு மிகக் குறைவாகவே இருந்தது. வேறு வழியின்றி, ரூ.20 முதல் 100 வரை கமிஷன் பெற்றுக்கொண்டு நோட்டுகளை மாற்றித் தந்தவர்கள் மூலம், தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளைப் பாலியல் தொழிலாளர்களில் சிலர் மாற்றிக்கொண்டனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள், இன்னும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்களிடம் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகப் பரவிய வதந்திகள் அவர்களை இன்னல்களுக்குள்ளாக்கின.

பணமதிப்பு நீக்கம் அமலுக்கு வந்த முதல் வாரத்தில், கொல்கத்தாவின் சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள், தடைசெய்யப்பட்ட ரூ.500, 1,000 நோட்டுகளை வாங்கிக்கொள்ள முன்வந்ததால், அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. மறுபுறம் ஒரு நபருக்கு ரூ.500-க்கும் குறைவாகக் கட்டணம் வாங்கும் பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாதிப்பைச் சந்தித்தனர். மீதிச் சில்லறை தர முடியாததால், ரூ.500, 1,000 நோட்டுகளுடன் வந்த வாடிக்கையாளர்களைத் தவிர்க்க வேண்டிவந்தது. இதனால், கூடுதல் நேரம் தங்களுடன் செலவிடுமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டதாகப் பாலியல் தொழிலாளர்கள் கூறினர்.

கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்காக இயங்கிவரும், உஷா கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருந்தவர்களால் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடிந்தது. ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு அது சாத்தியமாகவில்லை. பணமதிப்பு நீக்கம் அமலாகிப் பல மாதங்களுக்குப் பின்னரும், வாடிக்கையாளர்கள் பலர் மதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளையே எடுத்துச்சென்றனர் எனப் பாலியல் தொழிலாளர்கள் பலர் நினைவுகூர்ந்திருக்கிறார்கள். பாலியல் தொழிலாளர்களுக்குப் பல அடிப்படை ஆவணங்கள் இல்லாததைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களும் ஏஜென்டுகளும் ஏமாற்றிய கதைகள் இப்போது வெளியாகியிருக்கின்றன.

கரோனா பெருந்தொற்றுப் பரவலும் பாலியல் தொழிலாளர்களைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பின்னர் நிலைமை ஓரளவு சரியாகிவிட்டப் பின்னரும், இன்னமும் பலரால் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை. அவை வெற்றுக் காகிதங்களாகவே அவர்கள் வசம் மிச்சமிருக்கின்றன. கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஆதார் போன்ற ஆவணங்கள் இல்லாததும் அவர்களைத் தடுப்பூசிகளிலிருந்து பெருமளவில் விலக்கிவைத்திருக்கிறது.

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் முடங்கிவிட்டது என்பதைப் பெருமிதமாகவே சொல்லிக்கொண்டார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், பாலியல் தொழிலாளர்களும் மனிதர்கள்தான்; அவர்களுக்கும் வயிறு பசிக்கும் என்பதை ஏனோ பலரும் மறந்துவிடுவதுதான் விந்தை!

x