விமான சேவைகளை நிறுத்துங்கள்!


புதிய கரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் எழுந்திருப்பதை அடுத்து, அவற்றின் பாதிப்பு அடையாளம் காணப்பட்ட நாடுகளுடனான விமான சேவைகளை உடனடியாக நிறுத்துங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலின் இந்திய அத்தியாயம் தொடங்கிய காலத்தில், பன்னாட்டு விமான நிலையங்கள் அடங்கிய மாநகரங்களுக்கே முதல் அடி விழுந்தது. தொடர்ந்து அங்கே கரோனா பாதிப்பும் கட்டுப்பாடின்றி அதிகரித்து அரசு நிர்வாகத்தை இன்னலுக்குள்ளாக்கியது. குறிப்பாக மும்பை, டெல்லி போன்ற பகுதிகள் அடுத்தடுத்த அலைகளில் சிக்குண்டு, உயிரிழப்புகள், ஆக்சிஜன் மற்றும் படுக்கை உள்ளிட்ட மருத்துவ சேவை தட்டுப்பாடுகளால் அதிகம் நெருக்கடிக்கு ஆளாயின.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழலில், அதனிடமிருந்து தப்பித்து தற்போது டெங்கு காய்ச்சலுடன் டெல்லி போராடிக் கொண்டிருக்கிறது. டெல்லியைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் டெங்கு வரும் என்பதால், பாதிப்பு, சிகிச்சை என பழகிய சேவையில், பெரிய அளவில் பிசகாது சென்று வருகிறது. இதற்கு மாறாக கரோனா பரவலின்போது, டெல்லி வெகுவாய் தடுமாறித் தவித்தது.

அந்தக் கசப்பனுபவத்தை மறக்காத டெல்லி நிர்வாகம், புதிய கரோனா ரகமான ஒமிக்ரான் பரவல் குறித்து கவலை அடைந்துள்ளது. நடப்புச் சூழலில், அதிகரித்த பனிப்புகை காரணமாக, டெல்லி சுவாசிப்பதற்கே திணறி வருகிறது. மற்றுமொரு கரோனா அலை எழுந்தால், நுரையீரல் பிரச்சினைகள் பெரும் சவாலாகி விடும் என அஞ்சுகிறது.

இதையொட்டி, ஆப்பிரிக்க நாடுகள் உட்பட ஒமிக்ரான் அடையாளம் காணப்பட்ட அனைத்து தேசங்களில் இருந்தும் வான்வழி சேவையை நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிச.25 முதல் கோவிட் காலத்துக்கு முந்தைய விமான சேவைக்கு திரும்புவதாக, முன்னதாக மத்திய அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங், பெல்ஜியம் போன்ற நாடுகளில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய தேசங்கள் ஒமிக்ரான் பரவல் நாடுகளுடனான விமான சேவையை ரத்து செய்து வருவது கவனிக்கத்தக்கது.

x