எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க!


உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அசதுதீன் ஒவைஸியின் அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியும் களத்தில் இறங்கியிருக்கும் நிலையில், ‘வாக்குகளைப் பிரிப்பவர்’ எனும் பெயர்பெற்ற ஒவைஸி மீது, சகல கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. இந்நிலையில், “நான் யாருடைய ஏஜென்ட் என எல்லோரும் கலந்து பேசி முடிவுசெய்யுங்கள்” எனப் பேசியிருக்கிறார் ஒவைஸி.

கடந்த ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கட்பந்தனின் தோல்விக்கு ஒவைஸியும் ஒரு காரணம் என விமர்சிக்கப்பட்டது. சீமாஞ்சல் பகுதியில் அக்கட்சி 5 தொகுதிகளில் வென்றது. இவற்றில் 4 தொகுதிகளில் மகா கட்பந்தன் கூட்டணி 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றிருந்தது கவனிக்கத்தக்கது. சீமாஞ்சல் பகுதியில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, யாதவ் சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஏஐஎம்ஐஎம் அங்கு போட்டியிடாதிருந்தால் அல்லது மகா கட்பந்தன் அணி தோற்றிருக்காது என்று விமர்சனங்கள் எழுந்தன. “ஆர்எஸ்எஸ், ஏஐஎம்ஐஎம் இரண்டும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்” என்று காங்கிரஸ் கட்சி சாடியிருந்தது. மேற்கு வங்கத் தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரிக்க ஒவைஸி முயற்சித்ததாக விமர்சிக்கப்பட்டது.

தற்போது, உத்தர பிரதேசத் தேர்தல் களத்தில் மும்முரமாகியிருக்கும் ஒவைஸி, அம்மாநிலத்திலும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார். “சமாஜ்வாதி கட்சியின் ஏஜென்டாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வைத்து உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் பேசிவருபவர் ஒவைஸி என எல்லோருக்கும் தெரியும்” என யோகி சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்தார். இன்னொரு பக்கம், “ஒவைஸியின் கட்சியைப் பயன்படுத்தி பிஹார் தேர்தலில் பாஜக மேற்கொண்ட தந்திரம் கைகொடுத்தது. வாக்குகளைப் பிரிக்கும் ஒவைஸியிடம், மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருந்தார்.

இந்நிலையில், “நான் சமாஜ்வாதி கட்சியின் ஏஜென்ட் என யோகி ஆதித்யநாத் சொல்கிறார். சமாஜ்வாதியோ என்னை பாஜகவின் ஏஜென்ட் என்கிறது. காங்கிரஸ் என்னை இன்னாருடைய ‘பி’ டீம் என்கிறது. எல்லோரும் உட்கார்ந்து பேசி நான் யாருடைய ஏஜென்ட் என முடிவுசெய்யலாமே” என்று நகைச்சுவை கலந்து பேசியிருக்கிறார் ஒவைஸி.

x