காங்கிரஸை உடைத்து மோடியை மகிழ்விக்கிறார் மம்தா!


டெல்லி சென்றிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரைச் சந்தித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்காதது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், “காங்கிரஸ் கட்சியை உடைத்து மோடியை மம்தா பானர்ஜி மகிழ்ச்சியடையச் செய்கிறார்” என்று காங்கிரஸ் எம்.பியும், மேற்கு வங்கக் காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்திருக்கிறார்.

ஜூலை மாதம் டெல்லிக்குச் சென்றிருந்தபோது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்த மம்தா, ஆகஸ்ட் மாதம் நடந்த காணொலிச் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்களிடம் பேசியிருந்தார். இந்நிலையில், இந்த முறை டெல்லி பயணத்தின்போது பிரதமர் மோடியைச் சந்தித்து, பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் மம்தாவைச் சந்தித்து வானளாவப் புகழ்ந்திருந்தார்.

எனினும், சோனியா காந்தியை மம்தா சந்திக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்த முறை பிரதமரிடம் மட்டும்தான், சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அரசியல் தலைவர்கள் பஞ்சாப் தேர்தலில் மும்முரமாக இருக்கிறார்கள். வேலைதான் முதலில். எதற்காக ஒவ்வொரு முறையும் சோனியா காந்தியைச் சந்திக்க வேண்டும்?” என்று மம்தா கூறினார்.

இதுகுறித்து இந்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “சமீபத்தில் நிலக்கரிச் சுரங்க முறைகேடு புகார் தொடர்பான விசாரணைக்காக, மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது. அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பின்னர் அபிஷேக், காங்கிரஸ் குறித்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். மம்தாவும் அதையே செய்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று ஆசைகாட்டி காங்கிரஸிலிருந்து ஆட்களை மம்தா இழுத்துவருகிறார்” என்றார். மேலும், “இதன் மூலம் யாருக்குப் பலன் கிடைக்கும் மோடிக்குத்தானே?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நெல் கொள்முதல் விஷயமாகப் பேச வேண்டும் எனும் கோரிக்கையுடன் பிரதமரைச் சந்திக்க தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் 3 நாட்கள் காத்திருந்து, அனுமதி கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பினார். ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களுடனும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையுடனும் டெல்லி வந்த மம்தா பானர்ஜிக்கு, மோடி நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார் என்பதையும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்துவருபவர் ஆதிர் ரஞ்சன். அம்மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சி குறைந்திருப்பது முதல், சாரதா சிட்பண்ட் முறைகேடு வரை பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி மம்தாவுக்குத் தலைவலியை ஏற்படுத்திவந்தவர். மக்களவையிலேயே திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை ‘திருடர்கள்’ என்று விமர்சித்து, அக்கட்சியினரைக் கடுப்பேற்றியவர். காங்கிரஸ்காரரான அவரது இந்த விமர்சனங்களைக் கேட்டு, பாஜகவினரே மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்த விநோதக் காட்சிகளும் அரங்கேறியிருக்கின்றன என்பது தனிக்கதை!

மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, திரிபுரா போன்ற மாநிலங்களிலும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் தொடர்கிறது. இருதரப்பும் அரசியல் ரீதியான பகையாளிகளாகவே கருதப்படும் நிலையில், ஆதிர் ரஞ்சன் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே, மேகாலயா காங்கிரஸிலிருந்து முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொடர்ந்து காங்கிரஸிலிருந்து திரிணமூல் காங்கிரஸுக்குக் கட்சித்தாவல்கள் நடந்துவருவதன் மர்மம் குறித்தும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

x