அம்பானியை வீழ்த்திய அதானி!


முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமைக்குரியவர் முகேஷ் அம்பானி. இவருக்கு அடுத்ததாய் 2-ம் இடத்திலிருந்த கௌதம் அதானி, நேற்று அம்பானியை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறினார்.

கடைசியாக வெளியான ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர் பட்டியலின்படி, இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கௌதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளார்கள். அமெரிக்க டாலர் மதிப்பில் அம்பானியின் சொத்து மதிப்பு 91 பில்லியன்; இதுவே அதானிக்கு 88.8 பில்லியனாக இருந்தது. அதாவது 2.2 பில்லியன் மட்டுமே அம்பானி முன்னிலையில் இருந்தார்.

ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் அம்பானியை விட அதானியின் வளர்ச்சி வீதம் அதிகரித்திருந்தது. மார்ச் 2020-க்கு பிந்தைய அதானியின் வளர்ச்சி 1808% என்றும்; அம்பானி 250% என்ற அளவிலும் வளர்ந்தார்கள். இதில் இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பின் வேறுபாடு படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையே நேற்றைய(நவ.24) பங்குச்சந்தை மதிப்பீட்டில், ரிலையயன்ஸ் குழுமப் பங்குகள் வீழ்ச்சியையும், அதானி பங்குகள் ஏற்றத்தையும் சந்தித்ததில், அம்பானியின் சொத்து மதிப்பை அதானி தாண்டியது நடந்தது.

இதன் அடிப்படையில் நேற்றைய தினம் அம்பானியை முந்திக்கொண்டு, ஆசியாவின் பெரும் பணக்காரரானார் அதானி! பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மாற்றத்துக்குரியவை என்பதால், விரைவில் முதலிரு இடங்களை வகிக்கும் கோடீஸ்வரர்கள் இடம்மாறவும் வாய்ப்புண்டு.

x