ஆட்சியாளர்கள் மனசாட்சியைக் கேள்வி கேட்டுக்கொள்ளட்டும்!


தலைமை நீதிபதி ரமணா

‘தாங்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நன்மை பயக்குமா என்ற கேள்வியை ஆட்சியாளர்கள் தினந்தோறும் தங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதில் தீமை உள்ளதா என்பதையும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசம், அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 40-வது பட்டமளிப்பு விழா நேற்று (நவ. 22) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அழைக்கப்பட்டிருந்தார்.

தலைமை உரை ஆற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “ஜனநாயக நாட்டில் வாழும் அரசியலர்கள் அனைவரும் தினந்தோறும் அன்றாடப் பணியைத் தொடங்கும் முன்பு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தங்களிடம் தீய குணங்கள் உள்ளதா என்பதை உற்றுநோக்க வேண்டும். நியாயமான நிர்வாகத்தை நல்கும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப ஆட்சி புரியும் கடமை அவர்களுக்குள்ளது. ஜனநாயகத்தில் மக்கள்தான் உச்சபட்ச எஜமானர்கள். ஆகையால் ஆட்சியாளர்கள் எடுக்கும் எந்த முடிவாக இருப்பினும் அது மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் இயங்கக்கூடிய சூழல் அமைய வேண்டும் என்பதே என்னுடைய பெருவிருப்பம்.

ஆனால், துரதிருஷ்டவசமாக நவீன கல்வி முறை வெறும் வேலைக்கான கருவியாக மட்டும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மாணவர்களிடம் நற்பண்புகளையும் சமூகப் பொறுப்பையும், சமூக உணர்வையும் ஊட்டக்கூடிய அறம் சார்ந்த கல்வி இங்கு வழங்கும் நிலை உருவாக்கப்படவில்லை. நீதிநெறிகளை, நற்பண்புகளை, ஒழுக்கத்தை, தன்னலமின்மையை, கரிசனத்தை, சகிப்புத்தன்மையை, மன்னிக்கும் மனோபாவத்தை, சக மனிதர்கள் மீது மரியாதையை ஊட்டக்கூடியதே உண்மையான கல்வி.”

இவ்வாறு அவர் பேசினார்.

x