காதலிக்கு தாஜ்மஹால் கட்டிக்கொடுத்த ‘ஷாஜகான் 2.0’


காதலியுடன் ஆனந்த் சோக்சே

மத்தியப் பிரதேசம், பர்ஹன்பூரைச் சேர்ந்த ஆனந்த் சோக்சே என்பவர், தான் திருமணம் செய்யவிருக்கும் காதலிக்கு அச்சு அசலாக தாஜ்மஹாலைப் போன்றதொரு வீட்டைக் கட்டி பரிசளித்துள்ளார்.

‘தாஜ்மஹாலை கட்டியது யார்?’ என்று கேட்டால், ‘கொத்தனார்’ போன்ற கடி ஜோக் சொல்பவர்களுக்குக் கூடுதல் சேதி என்னவென்றால், இந்த ஆனந்த் சோக்சேதான் இந்த தாஜ்மஹால் வீட்டைக் கட்டியுள்ளார்.

இரவிலும் ஒளிரும் ஆனந்தின் தாஜ்மஹால்

ஆனந்த் சோக்சே கட்டுமானப் பொறியாளர் என்பதால், தாஜ்மஹாலின் கட்டுமானத்தை உற்றுக் கவனித்துத் தானே கட்டிட வடிவமைப்பை வரைந்திருக்கிறார். கூடுதலாக மேற்குவங்க மற்றும் இந்தூரைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்களிடம் செதுக்கும் சிற்பக்கலை தொடர்பான ஆலோசனை பெற்றுள்ளார்.

தாஜ்மஹாலின் கட்டிடக்கலையைப் போலவே தனது வீட்டின் உள்வடிவமைப்பையும் செய்திருக்கிறார். வீட்டின் கோபுரத்தை 29 அடி உயரத்தில் எழுப்பியுள்ளார். சுற்றிலும் நீளக் கோபுரங்களை கட்டியுள்ளார். தரை தளத்துக்கு ராஜஸ்தான் மக்ரானா பளிங்குக் கற்களைப் பயன்படுத்தியுள்ளார். நாற்காலி, மேஜை, கட்டில் உள்ளிட்ட மரச் சாமங்களை மும்பை கைவினைஞர்களை வரவழைத்து செய்திருக்கிறார்.

பிரம்மாண்டமான ஒரு வரவேற்பறை, கீழ்த் தளத்தில் 2 படுக்கை அறைகள், மாடியில் 2 படுக்கை அறைகள், ஒரு நூலகம், ஒரு தியான அறை கொண்ட இந்த வீட்டை அங்குலம் அங்குலமாகச் செதுக்கி மூன்றாண்டுகளில் கட்டி முடித்திருக்கிறார். கட்டிட அமைப்பில் மட்டுமல்லாமல், இரவில் நிஜ தாஜ்மஹாலைப் போலவே தனது வீடும் ஒளிர அழகிய விளக்குகளையும் கலை நயத்துடன் பொருத்தியுள்ளார்.

இத்தனையும் செய்யக் காரணம் என்ன தெரியுமா? காதல் மட்டுமல்ல, ஆனந்தின் கலை உணர்வும் வரலாற்று அறிவும்தான். ஆம்! ஷாஜகான் மனைவி மும்தாஜ் உண்மையில் இறப்பு எய்தியது, ஆனந்த் வசித்துவரும் பர்ஹன்பூர் நகரில்தான். முதலில், இந்த நகரில் பாயும் தாப்தி நதியோரம்தான் தாஜ்மஹாலைக் கட்டுவதாக இருந்தது. ஆனால், பிறகு ஆக்ராவுக்கு மாற்றப்பட்டது. இப்போது சொல்லுங்கள், ஆனந்த் உண்மையாகவே ‘ஷாஜகான் 2.0’ தானே!

x