உயிரிழந்துவிட்டதாக முடிவுசெய்து பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர், 6 மணிநேரம் கழித்து பிரேதப் பரிசோதனை நேரத்தில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசம், முராதாபாத் நகரில் சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் படுகாயமடைந்தார் ஸ்ரீகேஷ் குமார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் பிறகு, அவரது உடல் ஐஸ் பெட்டியில் கிடத்தப்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை தொடங்குவதற்கு முன்னால், அவர் குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்ட சமயத்தில் ஸ்ரீகேஷ் குமாருக்கு சுவாசம் இருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் ஸ்ரீகேஷ் குமாரின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
அவர் கோமாவில் இருப்பது அறிந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீகேஷ் குமாருக்கு மீண்டும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் எப்படி அறிவித்தனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.