சாதித்துக்காட்டிய சச்சின் பைலட்


காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், அக்கட்சிக்குள்ளேயே சலசலப்புகள் எழுவது தொடர்கதையாகிவிட்டது. பஞ்சாப் மாநிலக் காங்கிரஸில் சர்ச்சைகள் இன்னும் ஏதேனும் ஒரு வடிவில் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் சச்சின் பைலட்டின் கலகக் குரலால் குழப்பம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதையடுத்து, சச்சின் பைலட்டைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது. இன்று 15 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கும் நிலையில், அவர்களில் பலர் சச்சினின் ஆதரவாளர்கள் என்பது அவரது முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் நீண்டகாலமாகவே முரண்கள் இருந்துவருகின்றன. 2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்தே இருவருக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சினின் கடும் உழைப்பு முக்கியக் காரணியாக அமைந்தது. எனவே, தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். எனினும், மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கே முதல்வர் நாற்காலி கிட்டியது. சச்சினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

2020-ல், தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகச் சொன்ன சச்சின், தனது ஆதரவாளர்களுடன் குருகிராம் நகரில் முகாமிட்டார். பிரச்சினைகள் வலுத்ததால் துணை முதல்வர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

முன்னதாக, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கலகத்தைப் பயன்படுத்தி, ஜோதிராதித்ய சிந்தியாவைத் தங்கள் பக்கம் இழுத்து காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது பாஜக. அதே பாணியில் சச்சின் பைலட்டை இழுக்கவும் பாஜக தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் தாமதமாகவே சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் தலைமை, ஒருவழியாக சச்சினை சமாதானப்படுத்தியது. எனினும், கட்சிக்குள் கசப்பு தொடர்ந்துகொண்டேயிருந்தது.

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்புகளைக் கவனிக்கும் பொறுப்பை சச்சின் பைலட்டிடம் ஒப்படைக்க, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. எனினும், ராஜஸ்தான் முதல்வர் நாற்காலியைக் குறிவைத்தே சச்சின் பைலட் காய் நகர்த்திவருவதால், கட்சிக்குள் பூசல்கள் கடுமையாக அதிகரித்தன. 2023-ல் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வென்றால், தானே முதல்வராக நீடிக்கப்போவதாக அசோக் கெலாட் கூறிவந்த நிலையில், என்றென்றைக்குமாக ஒருவர் பதவியில் நீடிக்க முடியாது என்றும், இன்னும் 50 ஆண்டுகளுக்கு ராஜஸ்தானைவிட்டு தான் போகப்போவதில்லை என்றும் சச்சின் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்.

அத்துடன், அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் சமீபகாலமாக வலியுறுத்திவந்தார். தனது ஆதரவாளர்களுக்கு அதிக அளவில் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது அவரது எண்ணம். தனக்கு 18 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அவர் போர்க்கொடி தூக்கினார்.

இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்க வேண்டிய முதல்வர் அசோக் கெலாட்டுடன், பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து ஆலோசித்தார் அசோக் கெலாட். சமாதான முயற்சிகளில் ராஜஸ்தான் காங்கிரஸின் பொறுப்பாளரான அஜய் மாக்கன் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டது.

தற்போதைய 4 அமைச்சர்கள் உட்பட, மொத்தம் 15 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஓர் உத்தேசப் பட்டியலும் நேற்று வெளியானது. இவர்களில் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களான ஹேம்லால் சவுத்ரி, முரளி லால் மீனா, சஹிதா கான், ராஜேந்திர சிங் குடா உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, பட்டியலின / பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்று (நவ.21) மாலை 4 மணிக்குப் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

200 இடங்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், 108 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், பாஜகவின் வழக்கமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளிலிருந்து காங்கிரஸ் அரசு தப்பிவருகிறது. எனினும், சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர்கள் அதிருப்தியுடன் இயங்குவது, அடுத்த தேர்தலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைக் காங்கிரஸ் தலைமை உணர்ந்துகொண்டிருப்பதைத்தான் அமைச்சரவை மாற்றம் உணர்த்துகிறது.

x