டாட்டா காட்டுகிறதா டாடா?


கோப்புப் படம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் இயங்கிவரும் டாடா தொழில் நிறுவனத்துக்கு எதிராகத் தொழிற்சங்கத் தலைவர்கள், கடந்த புதன்கிழமை (நவ.17) நடத்திய 12 மணி நேர தர்ணா போராட்டம் கவனம் ஈர்த்திருக்கிறது. அதில் ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிர்வாகிகளும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்றதுதான் பலரை வியக்கச் செய்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்களிப்பாளரான டாடா குழுமத்துக்கு எதிராக, ஆளுங்கட்சியே இப்படி போர்க்கொடி தூக்கியது ஏன்?

முகவரி மாற்றம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலைவாய்ப்பு குறைவு என்பதாலும், படித்த இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களில் அலைய வேண்டியிருக்கிறது என்பதாலும், தனியார் துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியது அம்மாநில அரசு. மாதம் ரூ.40,000 வரையில் வருமானமுள்ள பதவிகளுக்கு உள்ளூர்வாசிகளைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மசோதாவின் முக்கிய அம்சம்.

ஜாம்ஷெட்பூரில், டாடா கம்மின்ஸ் என்ற இந்திய – அமெரிக்க கூட்டு நிறுவனம் 50:50 என்ற பங்கு முதலீட்டில், டீசல் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை ஜாம்ஷெட்பூரிலிருந்து மகாராஷ்டிரத்தின் புணே நகருக்கு மாற்றுவது என்று நிறுவனம் சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக தன்னுடைய ‘பான்’ முகவரியை புணே நகருக்கு மாற்ற விண்ணப்பித்தது. டாடா கம்மின்ஸ் நிறுவனம் 1993-ல், ஜாம்ஷெட்பூரில் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து 29 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. அப்படியிருக்க, அந்நிறுவனத்தின் இந்த முடிவு ஜார்க்கண்ட் அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் அதிர்ச்சியையும் கோபத்தையும் அளித்திருக்கிறது.

கேள்வியும் விளக்கமும்

“நிறுவனத்தைத் தொடங்க நாங்கள் நிலம், மின்சார இணைப்பு, தண்ணீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளையும் மூலப் பொருள்களான கனிமங்களையும் அளிக்கிறோம், இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டு லாபமும் சம்பாதித்துக்கொண்டு, உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுங்கள் என்றால் சூழ்ச்சியாக தலைமை அலுவலகத்தை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதா?” என்று ஆளுங்கட்சி தரப்பு கேட்கிறது.

ஆலை நிர்வாகமோ, இதில் சூழ்ச்சியெல்லாம் கிடையாது, புணே முகவரியில் அலுவலகத்தைப் பதிவு செய்திருப்பதால் நிர்வாக நடைமுறைகளின்படி தலைமை அலுவலகம் புணே நகரில் இயங்க வேண்டியிருக்கிறது, உற்பத்திப் பிரிவுகள் இங்கேயே தொடர்கின்றன. அதில் உள்ளூர்வாசிகளுக்குத்தான் நிறைய வேலைவாய்ப்பு என்று பதில் அளிக்கிறது.

நிறுவனங்கள் அச்சம்

இதற்கிடையே, டாடா நிறுவனத்தை அச்சுறுத்தும் வகையில் தர்ணா போராட்டம் நடத்தினால், நாளை பிற தொழில் நிறுவனங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வருவதற்கே தயங்கும் என்று டாடா நிறுவனத்தைச் சார்ந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் முனைவோர்கள் அஞ்சுகின்றனர். டாடா நிறுவனத்திடம் மாநில அரசு சார்பில் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாகப் போராட்டம் நடத்தினால், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் ஜார்க்கண்ட் வரத் தயங்குவர் என்பது அவர்களுடைய நியாயமான அச்சம். ஜார்க்கண்ட் போல, வேறு சில மாநிலங்களும் இப்படி சட்டம் இயற்றித் தங்களுடைய வாக்காளர்களுக்கு தங்களுடைய மாநிலப் பற்றை பறைசாற்றுகின்றன. அதேவேளையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடம்பெற்றுத்தர வேண்டும் என்ற விருப்பம் சிவசேனை தலைமையிலான அரசுக்கு இருந்தாலும், இன்னமும் அங்கு அதற்காகச் சட்டம் இயற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதக பாதகங்கள்

வேலைவாய்ப்பை அளிப்பதைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களானாலும் அரசுத் துறை நிறுவனங்களானாலும் திறமை, அனுபவம், தகுதி ஆகியவற்றுக்கே முன்னுரிமை வழங்கும். பயிற்சி அளிக்கக்கூடிய வேலையென்றால், உள்ளூர்க்காரர்களைத் தேர்வுசெய்ய நிறுவனங்கள் தயங்குவதில்லை. உள்ளூர்க்காரர்களை வேலைக்கு நியமிப்பதால் குடியிருப்பு, போக்குவரத்து, சாப்பாட்டு வசதி ஆகியவற்றை அவர்களுக்குச் செய்துதர வேண்டியதில்லை. அதுமட்டுமல்லாமல், உள்ளூரில் ஏதாவது பிரச்சினை என்றாலும் தொழிலாளர்களே தலையிட்டு சுமுகமாகத் தீர்த்துவைப்பார்கள். இந்நிலையில் நிறுவனத்தின் ஓர் முடிவை, சூழ்ச்சியாகக் கருதி பிரச்சினையாக்கினால் அரசு - தொழில் துறை உறவுதான் கெடும்.

அதற்குப் பதிலாக, உயர் பதவிகளில் உள்ளூர்க்காரர்கள் சேருவதற்குத் தகுதியான கல்வி நிலையங்களைத் திறப்பதை அந்தந்த மாநில அரசுகளே முதல்கட்டமாக மேற்கொள்ளலாம். அத்துடன் அந்தக் கல்வி நிலையங்களுடன் இணைத்து நேரடி தொழிற்பயிற்சிக்கும் வழி செய்தால், மாணவர்களாக இருக்கும்போதே தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு நிறுவனத்தில் நேரடியாகச் சேர்ந்துவிட முடியும். தொழில்நுட்பம் மட்டுமல்ல நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளுக்கும் அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு நிலம், நீர், மின்சாரம், கனிமங்கள் ஆகியவற்றை அளிக்கும் மாநிலங்களின் பின்தங்கிய நிலைமையைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் இளைஞர்களுக்குப் போதிய பயிற்சி அளித்து இயன்றவரையில் வேலைவாய்ப்புகளை உயர் பதவிகளிலும் அளித்தால் அது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உதவும், மக்களுடைய முன்னேற்றமும் உறுதிப்படும். அதுவும் அவர்களுடைய சமூகப் பொறுப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில்தான் செயல்படும், அதே சமயம் அவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த போட்டிகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பவை என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் கட்சிகள் எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்துவதால் தொழில் வளர்ச்சிதான் பாதிக்கும்.

“தொழிற்சங்கங்களின் போராட்ட குணத்தால், படித்தவர்கள், தகுதி வாய்ந்தவர்கள் அதிகம் இருந்தும் தொழில் வளர்ச்சி இல்லாத மாநிலங்கள் மேற்கு வங்கமும், கேரளமும். நாடு சுதந்திரம் அடைந்தபோது தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாட்டுக்கு இணையாக இருந்த மேற்கு வங்கத்தின் இன்றைய நிலை அனைவரும் அறிந்ததே. போராடும் அரசியல் கட்சிகள் இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்” என்று சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அதேவேளையில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இல்லாமல் போனால் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவது எப்படி எனும் நியாயமான கேள்வியும் தொடர்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி, மாநில அரசே புதிய தொழிற்சாலைகளை, தொழிற்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்கலாம். தமிழ்நாட்டில் சிப்காட்டுகள் அதைத்தான் செய்தன!

x