நகைச்சுவை, பகடி எல்லாம் நம்மைச் சிரிக்கவைக்க மட்டுமல்ல சிந்திக்கவைக்கவும் வேண்டும். ஆனால் நகைச்சுவையைக் கேட்டு இன்று இந்தியாவின் வலதுசாரிகள், ஏன் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கூட கோபத்தின் உச்சிக்குச் சென்றிருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஸ்டாண்ட் அப் காமெடியனான வீர் தாஸ் அமெரிக்காவின் கென்னடி செண்டரில் ‘நான் இரண்டு இந்தியாக்களிலிருந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் பேசிய 7 நிமிடங்களுக்கும் குறைவான கவிதை போன்ற நகைச்சுவை துணுக்கு பல வலதுசாரிகளை ஆத்திரம் கொள்ளச்செய்துள்ளது.
வீர் தாஸ் இந்தியாவை உலக அரங்கில் கலங்கப்படுத்திவிட்டார். அவரை கைது செய்யவேண்டும், அவரை தூக்கிலிட வேண்டும் என்றெல்லாம் கருத்து தெரிவித்துவருகின்றனர். கங்கனா ரணாவத் வீர் தாஸ் செய்வது ஒரு மிதமான தீவிரவாத செயல், இது தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மும்பை பாஜக செயலாளர் டெல்லி காவல்துறையிடம், தேசியவாதிகளின் மனதைப் புண்படுத்தும் விதமாகப் பேசியதற்காக வீர் தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பாஜக-வை சேர்ந்த மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் வீர் தாஸ் மத்தியப் பிரதேசத்தில் இனிமேல் நிகழ்ச்சியே நடத்தக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் சிங்வி வீர் தாஸை காட்டமாக விமர்சித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த பெண் தலைவரான மகா மொய்த்ரா போன்றோர் வீர் தாஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சரி, வீர் தாஸ் அப்படி என்னதான் பேசிவிட்டார்..?
இந்தியாவில் இருக்கும் முரண்களை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
“நான் இரண்டு இந்தியாக்களிலிருந்து வருகிறேன்...
பெண்களைப் பகலில் கடவுளாகவும், இரவில் கூட்டுப் பலாத்காரம் செய்யும் இந்தியாவிலிருந்து வருகிறேன்...
நான் இரண்டு இந்தியாவிலிருந்து வருகிறேன்..
சைவ உணவு உண்பதைப் பெருமையாக நினைக்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன்..
அந்த காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் மீது வண்டி ஏற்றிக் கொல்லும் இந்தியாவிலிருந்து வருகிறேன்” இது வீர் தாஸ் பேச்சின் ஒரு பகுதி. அவர் பேச்சு முழுக்க இந்தியாவின் முரண்களையும், பிற்போக்குத்தனங்களையும் காத்திரமாகச் சாடியிருக்கிறார்.
உண்மையாக அந்த பிரச்சனைகள் இங்கே நம் கண் முன் இருப்பவைதான், அதற்கெல்லாம் கோவப்படாமல், பிரச்சனை இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொன்னால் மட்டும் கோவல் வருகிறது என்றால் பிரச்சனை யாரிடம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வீர் தாஸுக்கு ஆதரவுகளும் மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கும் நிலையில், வீர் தாஸின் பேச்சில் ஏன் அவர் இந்தியாவின் முக்கிய பிரச்சனையான சாதியைப் பற்றிப் பேசவில்லை என்ற விமர்சனமும் அவர் மேல் வைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேடை நகைச்சுவை கலைஞரான முனாவர் ஃபாரூக்கி அவரின் கருத்துக்காகக் கைது செய்யப்பட்டு விடுதலையான பின்பும் கூட அவரை நிகழ்ச்சி நடத்தவிடாமல் வலதுசாரிகள் அமைப்புகள் மிரட்டி வருகின்றன. என்று கூறுகிறார் இந்தியா முழுவதும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தும் விசேஷ் அரோரா. மேலும் அவர், “இந்த அரசாங்கம் காமெடியன்களிடம் என்ன ஜோக் சொல்ல வேண்டும் என்று மட்டும் கட்டளையிடவில்லை, எதற்கு நீங்கள் சிரிக்க வேண்டும் என்றும் உங்கள் மேல் அதிகாரத்தைச் செலுத்துகிறது. குறி எங்கள் பேனாக்களுக்கு அல்ல...உங்கள் குரல்வளைகளுக்கு” என்று தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுக்கிறார்.
வீர் தாஸ் கூறுவது போல் “இங்கே ஒரு மிகப்பெரும் நகைப்புக்குரிய விஷயம் இருக்கிறது..ஆனால் அதைப்பார்த்து நம்மால்தான் சிரிக்க முடியவில்லை”. அது ஏன் என்று ஆராய முற்படுவதே சமூக முன்னேற்றத்திற்கான வழியாக இருக்கும்.
சர்ச்சையை கிளப்பிய காணொளி: