அடிக்கடி சீறிவிழும் நிதீஷ்; அதிருப்தியின் பின்னணி என்ன?


ஏற்கெனவே கோபத்துக்குப் பெயர்போன பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் ஏகக் கோபம் காட்டுகிறார். கடந்த சில மாதங்களாகவே நிதீஷின் நிம்மதியைக் குலைக்கும் வகையில் செய்திகள் வருவதால், இன்னும் அதிகமாகவே கடுகடுக்கத் தொடங்கியிருக்கிறார் அவர்.

அந்த வகையில், ஜனதா தர்பாரில் நேரடியாகப் பங்கேற்று அதிரடி காட்டிவரும் நிதீஷ் குமார், கிராமவாசி ஒருவர் கொடுத்த புகாரைக் கேட்டு அதிகாரிகளிடம் கோபம் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஜனதா தர்பார் நடத்திவருகிறார் நிதீஷ். 2006 முதல் இதை நடத்திவந்த அவர், 2016-ல் இந்தக் கூட்டங்களை நிறுத்திவைத்தார். இந்நிலையில், ஜூலை மாதம் முதல் இதை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இதில், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்திசெய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் பணிகளிலும் ஈடுபடுகிறார். ஜனதா தர்பார் நடக்கும் நேரத்தில், அருகில் நிற்கும் அதிகாரிகள், முதல்வரின் உத்தரவுகளுக்காகப் பரிதவிப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று (நவ.15) ஊரக வளர்ச்சி, எரிசக்தி, போக்குவரத்துத் துறை போன்ற துறைகள் சார்ந்த புகார்களை முதல்வரிடம் நேரடியாகத் தெரிவிக்க பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.

அப்போது, தனது கிராமத்தில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கயா மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் முதல்வரிடம் புகார் கூறினார். கூடவே மற்றொரு கிராமத்தில் மரங்கள், செடிகள் நடப்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி சாலை அமைக்கும் பணி நடந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக 5 மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த முதியவர் கூறினார்.

அதைக் கேட்ட நிதீஷ் குமாருக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. உடனடியாக அருகில் இருந்த தலைமைச் செயலாளரை அழைத்து, ஏன் இத்தனைத் தாமதமாகிறது என்று கோபமாகக் கேட்டார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தலைமைச் செயலாளர் பதிலளித்த பின்னர்தான், நிதீஷ் முகத்தில் இருந்த கடுகடுப்பு மறைந்தது.

அதேபோல், மின் கட்டணம் அதிகமாக வருவதாக இளைஞர்கள் சிலர் தெரிவித்த புகாரும் நிதீஷ் குமாரைக் கோபம்கொள்ளச் செய்தது. உடனடியாக எரிசக்தி துறைச் செயலாளரை அழைத்து, “எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது?” என்று கேட்டார். “முழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.

முன்னதாக, ஜனதா தர்பார் நடந்துகொண்டிருந்தபோது, ஏ.சி இயந்திரத்திலிருந்து இரைச்சல் சத்தம் வந்ததால் கோபமடைந்த நிதீஷ், “இந்தக் குளிர்காலத்தில் எதற்கு ஏசி? அதை அணைத்து வையுங்கள்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடந்த சில மாதங்களாகவே, பல்வேறு பிரச்சினைகளால் நிதீஷ் அதிருப்தியடைந்திருக்கிறார். பிஹாரின் சுகாதாரத் துறை படுமோசமாக இருப்பதாக, சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை நிதீஷைக் கோபமடையச் செய்தது. பிஹாரின் உண்மையான நிலவரத்தை நிதி ஆயோக் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்த நிதீஷ், “நிதி ஆயோக் எப்படிச் செயல்படுகிறது என்றே எனக்குத் தெரியவில்லை. நிதி ஆயோக்கின் அடுத்த கூட்டத்தில் நானே கலந்துகொண்டு எல்லா உண்மைகளையும் எடுத்துரைப்பேன்” என்று கூறியிருந்தார். அதேபோல், மதுவிலக்கு அமலில் இருக்கும் பிஹாரில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை வைத்து, நிதீஷ் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக மது விநியோகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. போதாக்குறைக்கு, பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலும் இவ்விஷயத்தில் நிதீஷ் மீது புகார் தெரிவித்துவருகிறார். இவை எல்லாம் சேர்ந்து நிதீஷை நிம்மதி இழக்கவைத்திருப்பதாகவும், அதனால்தான் அவர் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் என்றும் கருதப்படுகிறது.

x