கடந்த 2 வாரங்களாக, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்று வந்தது. இதில் பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளி திஷா ரவி பங்கேற்க விரும்பியதாகவும், தனக்கு கடவுச்சீட்டை வழங்க மறுத்து மத்திய அரசு தன்னை தடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 88 நாட்களுக்கு முன்பே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தபோதும், அதுதொடர்பாக இதுவரை தான் தொடர்புகொள்ளப்படவில்லை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீவிரமாகச் செயலாற்றிவந்தவர் 22 வயதான சூழலியலாளர் திஷா ரவி. பெங்களூரைச் சேர்ந்த இவர் கல்லூரி காலம் தொட்டு, ‘மரங்களைப் காப்போம்’ பிரச்சாரம் உள்ளிட்ட சூழலியல் சார்ந்த நடவடிக்கைகளில் துடிப்புடன் ஈடுபட்டுவருகிறார்.
ஸ்வீடன் நாட்டு பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க்குடன் சேர்ந்து ‘ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்’ அமைப்பை இந்தியாவில் நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்கவேண்டி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பேரணியாகச் செல்வது உள்ளிட்ட ஜனநாயக அடிப்படையிலான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக 2020-ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசு கொண்டுவந்தபோது, அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பாதகம் விளைவிக்கும் அம்சங்கள் இருப்பதாக ‘ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்’ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிர்நடவடிக்கையாக இந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டது.
இதற்கிடையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கையாக ஒரு செயல்திட்டத்தைத் தீட்டி கிரேட்டா துன்பர்க் ‘டூல்கிட்’ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இந்த ‘டூல்கிட்’ விவகாரத்தில் திஷா ரவிக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி 13-ல் டெல்லி போலீஸார் அவரை கைது செய்தனர். இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் கைகோத்து, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் உண்டாக்கும் சதித்திட்டத்தில் திஷா ரவிக்கு பங்கிருப்பதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம், “விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்கும் திஷா ரவிக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை” என்று தீர்ப்பளித்து அவருக்கு மார்ச் மாதம் ஜாமின் வழங்கியது.
இந்தியாவில் ஜாமினில் வெளிவருவதென்பது பாதி சுதந்திரம் அடைவதற்கு ஒப்பானது. நீங்கள் குற்றமற்றவராக இருப்பினும் உங்கள் மீது போடப்பட்ட எஃப்ஐஆர் வாழ்நாள் முழுவதும் உங்களைத் துரத்தும். பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள நினைத்தால்கூட அது உங்களைத் தடுக்கும்.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தவேண்டி, ஐநா சபை நடத்திய மாநாட்டில் கலந்துகொள்ள திஷா ரவி முயன்றார். கிரிஸ்ட் எனும் தன்னார்வ நிறுவனத்தின் சார்பாக, கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் திஷா ரவி கலந்துகொள்வதாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு கடவுச்சீட்டு இதுவரை வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக பிரிட்டன் நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தவர், “நான் எத்தகைய விதிமீறலிலும் ஈடுபடாதபோதும் இந்திய நீதித் துறை எனக்கான சிவில் உரிமைகளை மறுத்தது. என்மீது குற்றம் சுமத்தப்பட்டபோது அநாவசியமாக நீதிமன்ற விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டேன். அதைவிட டெல்லி போலீஸார் என்னை சாராய பீப்பாயுடன் ஒப்பிட்டுப் பேசி இழிவுபடுத்தினர். இந்நிலையில் கிளாஸ்கோ மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமானால் நான் 2 சிக்கலான கட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது. முதலாவதாக கடவுச்சீட்டைப் பெறுதல். அடுத்ததாக நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறுதல். ஆனால், இத்தனை மாதங்களாகியும் முதலாவது விஷயமே நடக்கவில்லை. நான் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டபோது, என்னுடைய வழக்கு முடியும்வரை நாடு தாண்டி செல்ல எனக்கு அனுமதியில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தியாவில் ஜாமினில் வெளிவருவதென்பது பாதி சுதந்திரம் அடைவதற்கு ஒப்பானது. நீங்கள் குற்றமற்றவராக இருப்பினும் உங்கள்மீது போடப்பட்ட எஃப்ஐஆர் வாழ்நாள் முழுவதும் உங்களைத் துரத்தும். பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள நினைத்தால்கூட அது உங்களைத் தடுக்கும். ஒருவர் குற்றமற்றவர் என்று நம்பவேதான், நீதிமன்றம் அவருக்கு ஜாமின் அளிக்கிறது. ஆனாலும் கடவுச்சீட்டு வேண்டுமெனக்கேட்பது அதிகப்படியானதாகக் கருதுகிறது. எனக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்துக்கே, நான் நன்றியுடன் நடந்துகொள்ளும்படி எதிர்பார்க்கிறது. ஏனென்றால், இப்போது நான் என்னுடைய மாநிலத்திலும் வீட்டிலும் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேனே! ஆனால், நாங்கள் எதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும் சொல்லுங்கள்?” என்று வருத்தத்துடன் பதிவு செய்தார்.