\குஜராத் மாநில பெருநகரம் அகமதாபாத்தின் தெருக்களில் இறைச்சி உணவு பண்டங்களை காட்சிப்படுத்தி இனி விற்பனை செய்யக்கூடாது’ என்று, அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கெனவே குஜராத்தைச் சேர்ந்த வதோதரா, ராஜ்கோட், பவாநகர் ஆகிய பகுதிகளில் இறைச்சி காட்சிப்படுத்தத் தடை விதித்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
’போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதினாலும்’, ’பொதுமக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதினாலும்’, அடுத்த 2 வாரங்களுக்குள் இது அமலுக்கு வரும் என்று வதோதரா மாநகராட்சித் தலைவர் ஹிதேந்திர படேல் கடந்த வியாழன் அன்று அறிவித்தார்.
மறுபுறம், பாஜக மாநில தலைவர் சி.ஆர். பாட்டில் இந்த முடிவை தான் ஏற்கவில்லை என்று கூறியுள்ளார். இறைச்சி பண்டங்களை வீதியில் இருந்து அகற்றும்படி மக்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று, மாநகராட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். பாஜக அரசுக்கும் இந்த முடிவுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கைவிரித்தார். குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 8 மாநகராட்சிகளிலும் பாஜக மட்டுமே ஆட்சியில் உள்ள போதிலும் இந்த முடிவு தொடர்பாக முன்னுக்குப்பின் முரணான கருத்தை மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டில் தெரிவித்துள்ளார்.
தூய்மை, பண்பாட்டைக் காக்க!
மறுபுறம், இறைச்சி உணவுப் பண்டங்களைத் தெருக்களில் விற்பனை செய்வதையே முற்றிலுமாக தடை செய்யக் கோரி அகமதாபாத் மாநகராட்சி வருவாய் துறை தலைவர் ஜெய்நிக் வக்கில் சில நாட்களுக்கு முன்பு, அகமதாபாத் மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். “குஜராத்தின் அடையாளத்தையும் கர்நாவதியின் (அகமதாபாத்தின் பழங்கால பெயர்) பாரம்பரியத்தையும் பாதுகாக்கத் தெருக்களில், கோயில்கள், கல்விக்கூடங்கள் உள்ள பகுதிகளில் இருந்து இறைச்சி உணவகங்களை அப்புறப்படுத்த வேண்டும். கறி, ஆட்டிறைச்சி, மீன் ஆகியவற்றின் விற்பனையால் பொதுமக்களால் தெருவில் நடமாட முடியவில்லை. இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்களின் மத உணர்வுகளும் புண்படுகிறது. இதுதவிர தூய்மையையும் பண்பாட்டையும் பேண இந்த நடவடிக்கை முக்கியம்” என்று மாநகராட்சி ஆணையருக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் கட்டுப்பாடு விதித்ததில்லை!
ஆனால், பாஜகவின் கேதா மாவட்டம் டிஜிட்டல் பிரிவின் முன்னாள் தலைவர் நந்திதா தாகூர் தனது டிவிட்டர் பக்கத்தில், “நம்முடைய மக்களில் பலரும் மீன் விற்பனை செய்துவருவதை மறுக்க இயலாது. தலைவர் நரேந்திர மோடி சைவம் மட்டுமே சாப்பிடுபவராக இருப்பினும் அவர் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோதும் சரி, இப்போது பிரதமராகப் பதவி வகிக்கும்போதும் சரி ஒருபோதும் இறைச்சி உணவுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்ததில்லை. இதை மனத்தில் கொண்டு, நம் மக்களுடைய வாழ்வாதாரத்துக்கான வேறு வழிவகையை ஏற்பாடு செய்துத்தர வேண்டுகிறேன்” என்று பதிவிட்டார்.
’பீப் தடை’ ஏற்படுத்திய வடு!
’திருடப்பட்ட மாட்டின் கறியை வீட்டின் ஃப்ரிட்ஜில் பதுக்கி வைத்திருந்தார்’ என்று பழிசுமத்தப்பட்டு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அக்லக் 6 ஆண்டுகளுக்கு முன்பு, அடித்துக் கொல்லப்பட்ட கோர சம்பவம் இன்னும் நம் மனதைவிட்டு அகலவில்லை. இதன் தொடர்ச்சியாக, குஜராத் மாநிலம் உன்னா பகுதியில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காகப் பட்டியலின இளைஞர்கள் 7 பேர் இரும்புக் கம்பிகள், மாட்டை விரட்டும் குச்சிகள் கொண்டு அடித்து கொடூரமாகத் தோலுரிக்கப்பட்டனர். அதே காலகட்டத்தில், அடிப்படைவாதத்தை எதிர்த்துப் பகுத்தறிவும் சமயநல்லிணக்கமும் முன்வைத்த அறிஞர்கள் கல்புர்கியும் தபோல்கரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. அதன்பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. குற்றத்தின் பின்னணி தெரிந்தும் அதன் போக்குத் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதால், கவுரி லங்கேஷ் போன்ற ஜனநாயகத்தையும் ஊடக அறத்தையும் பறைசாற்றிய பேராளுமையையும் அடிப்படைவாதிகளுக்குப் பலிகொடுக்க நேர்ந்தது.
இருப்பினும், ’மாட்டிறைச்சிக்குத் தடை’ விதிக்கப்படும் என்ற பிரச்சினை 2017-ல் கிளம்பியபோது, “பீப் சாப்பிட மட்டும்தானே தடை என்கிறார்கள் மற்ற இறைச்சிகளைச் சொல்லவில்லையே” என்று வாதித்தவர்களுக்கு தற்போதைய செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், ”இறைச்சி பண்டங்களை காட்சிப்படுத்தத் தடை என்று ஆரம்பித்திருக்கும் இந்த நடவடிக்கை, அதனுடன் நின்றுவிடாது என்பதை பாஜகவினரின் நடவடிக்கையும் கடந்தகால நிகழ்வுகளும் உணர்த்துகின்றன. மாட்டிறைச்சியில் தொடங்கியது, இப்போது அனைத்துவிதமான இறைச்சி உணவு விற்பனைக்கும் வந்து சேர்ந்திருப்பது சகிப்பின்மை அரசியலின் அடுத்த கட்டம்” என்று அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.