பழங்குடி விடுதலைப் போராளிகள் நாள் இன்று : நவ.15 பிர்சா முண்டா பிறந்தநாள்


புரட்சியாளர் பிர்சா முண்டா பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடு

அரசியல் விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை நாடு எட்டியதை முன்னிட்டு, இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக நவ.15-ம் தேதி பழங்குடி விடுதலை போராளிகளை நினைவுகூரும் நாளாக, இந்த ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நாளில்தான் ’பகவான்’ என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் பழங்குடியின புரட்சியாளர் பிர்சா முண்டா பிறந்தார். நவ.15 முதல் 22 வரை பிர்சா முண்டாவையும் பழங்குடியினரின் விடுதலை வேட்கையையும் போற்றும் விதமாகப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த வாரம் அறிவித்தார்.

பழங்குடியின சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டங்களும் புரட்சிகரமான இயக்கங்களும் வீரமும் ஒப்பற்ற தியாகமும் நிறைந்தவை. அவர்கள் கிளர்ந்தெழுந்து, நாடெங்கும் போராட்டத்தில் இறங்கி இந்திய விடுதலையில் கணிசமான பங்களிப்பை ஆற்றியுள்ளனர். ஆனால், பொதுச் சமூகத்துக்கு இன்னும் பழங்குடியினரின் பங்களிப்பு கொண்டு சேர்க்கப்படவில்லை. கோண்ட் பழங்குடி போராளி கொமுரும் பீம் பற்றியோ, முண்டா அல்லது கோல் பழங்குடியினப் போராளியான பிர்சா முண்டாவைப் பற்றியோ அல்லது இவர்களைப் போன்ற பலரைப் பற்றியோ பாடப் புத்தகங்களில் இதுவரை பதியப்பட்டதாகத் தெரியவில்லை.

பிர்சா முண்டா

வீரம் விளைந்த பழங்குடி வரலாறு

இந்நிலையில் அவர்களுக்கென ஒருநாள் ஒதுக்கப்பட்டிருப்பதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 600-க்கும் அதிகமான பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த 8 கோடி மக்களுக்குக் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாழ்வாதாரத்தை உயர்த்தும் நலப்பணிகளை மத்திய அரசு உயர்த்த உறுதி அளித்துள்ளது.

இதை ஒட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் ’பழங்குடி விடுதலைப் போராளி’ அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி காணொலி வழியாக இன்று திறந்துவைக்க இருக்கிறார். 2016-ம் ஆண்டு விடுதலை நாளன்று ஆற்றிய உரையிலேயே, ‘நாடுமுழுவதும் 10 பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் நிறுவப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பதை, இங்கே நினைவுகூர வேண்டியுள்ளது.

இந்நிலையில், இன்று பிர்சா முண்டாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, மத்தியப் பிரதேசம் போபால் நகரில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றவிருப்பதாகவும் பழங்குடியினருக்கான பல நல திட்டங்களை தொடங்கிவைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை ஒட்டி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், “பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி அவரை மரியாதையுடன் வணங்குகிறேன். சுதந்திரப் போராட்டத்தின் கூர்முனையில் தீவிரமாகச் செயலாற்றிய அதேவேளையில், தங்களது பழங்குடியின மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கப் போராடியவர் அவர். தேசத்துக்கான அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக்கூரப்படும்” என்று மோடி பதிவிட்டிருந்தார்.

கே.எஸ்.சிங் எழுதிய, ‘பிர்சா முண்டா’ நூல்

ஏற்கெனவே, 2 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் பா.ரஞ்சித் இந்தியிலும் இயக்குநர் கோபி நயினார் தமிழிலும் ‘பிர்சா முண்டா’வின் பையோ பிக் எடுக்கவிருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இச்சூழலில், பிர்சா முண்டாவின் வரலாற்றை அறிவதற்கான தாகம் மீண்டும் நாடெங்கிலும் தற்போது ஏற்பட்டுள்ளது.

1895-லிருந்து 1900 வரை ஆங்கிலேயரை எதிர்த்து பிர்சா முண்டா செய்த கலகம், இன்றும் முந்தாரி கிராமிய பாடல்கள் மற்றும் கதைகளின் வழியாகப் போற்றப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். முழுமையான கிளர்ச்சி என்று பொருள்படும் ’உல்குலான்’ போராட்டத்தை, பிர்சா முண்டா முன்னெடுத்தது குறித்த வரலாற்றுப் பதிவு 1920-கள்வரை பதிவு செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகளோ, கிறிஸ்தவ அமைப்புகளோ, இந்தியச் சமூக அறிஞர்களோ பிர்சா முண்டா குறித்து எழுதவில்லை. ஆனால், தனது 25 வயதுக்குள் பிர்சா உருவாக்கிய இளையோர் எழுச்சிப் படையினர், செவிவழி செய்தியாக பிர்சாவின் வீரதீரத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தினர். அவர்களில், பர்மி முண்டா போன்ற சிலர் எழுத்து வடிவிலும் பிர்சா குறித்து எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு, 1949-லிருந்து புத்தக வடிவில் பிர்சாவின் வரலாறு வெளிவரத் தொடங்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் ‘பிர்சா முண்டா’ என்ற தலைப்பிலேயே புத்தகம் வெளிவந்தது. இப்புத்தகத்தை எழுதியவர் பிஹார் மாநில ஐஏஎஸ் அதிகாரி கே. சுரேஷ் சிங். இவர், பிர்சா முண்டா குறித்து தனது முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்து முடித்தவர். இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். பிஹார் கிராமவாசிகளின் வாய்மொழி இலக்கியத்தை 10 ஆண்டுகாலத்துக்கும் மேலாகச் சேகரித்து, மேலும் ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, பிர்சா முண்டாவின் வாழ்க்கை சரிதத்தை 1966-ல் நூலாக வெளியிட்டார்.

உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்!

ஓர் இளைஞர் அதுவும் 6 ஆண்டுகளில் தம் மண்ணின் மைந்தர்களுக்கு, ‘மண்ணின் தந்தை’யாக (‘தர்த்தி அபா’) உருவெடுத்த பெரும்புரட்சியாளர் பிர்சா முண்டா. ஜார்க்கண்ட் மாநில குந்தி மாவட்டத்தில், 1875 நவம்பர் 15 அன்று பிர்சா முண்டா பிறந்தார். தனது 25 வயதுக்குள் நாட்டு விடுதலைக்காகவும் நிலச்சுவாந்தாரர்களிடம் சிக்குண்டு கிடந்த பழங்குடியின மக்களின் அடிமைத்தளையைத் தகர்த்தெறியவும் பெரும் புரட்சியை முன்னெடுத்தார்.

உள்நாட்டு ஜமீதாரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் பிடியில் மாட்டிக் கொண்டு, தங்களது உழைப்பை தாரைவார்த்தே மடிந்த பழங்குடியின மக்களை மீட்க, ‘உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்’ என்று போர்க்குரல் எழுப்பினார். ஆங்கிலேயரின் காலணி ஆதிக்கத்தில் மதிமயங்கி கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில், ”தங்கள் தேசத்தை தாங்களே ஆள்வோம்!” என்று முஷ்டியை உயர்த்தினார்.

தனது 19 வயதிலேயே அரசியல் விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போர்க்கொடி தூக்கினார். காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை நாக்பூரில் அவர் நடத்தியதே, நாட்டின் பழங்குடிகளின் முதல் உரிமைப் போராட்டம் என்று அடையாளம் காணப்படுகிறது. அவரது தலைமையின்கீழ் பழங்குடி வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட போது, பிரிட்டிஷ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொடுஞ்சிறையில் சித்தரவதை செய்யப்பட்டவர், 25 வயதில் தன் மண்ணின் மைந்தர்களுக்காக மாண்டார்.

x