செய்தி 1:
2015-ம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டிருக்கிறார். “100 நாள் வேலைத் திட்டத்தை மோடி ரத்துசெய்து விடுவார்... மூடுவிழா நடத்திவிடுவார் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள். நான் இந்தத் திட்டத்தை ரத்துசெய்ய மாட்டேன். ஏனென்றால், நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகப்போகும் தருணத்திலும் நிலத்தில் நின்று மண்வெட்டி பிடித்து வேலைபார்க்க வேண்டிய சூழலில் மக்களை நீங்கள் (காங்கிரஸ் கட்சி) வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதை உலகுக்கு எப்படிக் காட்டுவது? நான், ஏன் இதை ரத்துசெய்ய வேண்டும்?” என்று பாஜகவினரின் பலத்த கைதட்டல்களுக்கு நடுவே பதிவுசெய்கிறார்.
சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இறுக்கமான முகத்துடன் இதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
செய்தி 2:
100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதியில், நடப்பு நிதியாண்டில், கடந்த ஆண்டை ஒப்பிட 34 சதவீதம் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதனால், போதிய நிதி இல்லாமல் இத்திட்டம் தள்ளாடத் தொடங்கியிருக்கிறது. 2020-ல் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 1.11 லட்சம் கோடி நிதியை இத்திட்டத்துக்கு மோடி அரசு ஒதுக்கியது. அது பெரிய தொகை எனப் பாராட்டப்பட்டது. எனினும், 2021-22 பட்ஜெட்டில் அந்த நிதி 73 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.
மேற்கண்ட, 2 செய்திகளுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக யாரும் வாதிட முடியாதுதான். எனினும், இத்திட்டம் தொடர்பாக வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், இதன் எதிர்காலம் என்னவாகும் என்று எழும் கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
கவலை தரும் தகவல்கள்
வேலைவாய்ப்பு உத்தரவாதத்துக்கான மக்கள் செயல்பாடு (பிஏஇஜி) எனும் அமைப்பும், லிப்டெக் இந்தியா எனும் அமைப்பும், சமீபத்தில் பல முக்கியத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில் தாமதம் நிகழ்வதாக, இந்த இரு அமைப்புகளும் சுட்டிக்காட்டியிருக்கின்றன. குறிப்பாக, ஒரு வாரத்துக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில், 71 சதவீத ஊதியம் அந்தக் காலக்கெடுவைத் தாண்டியே தொழிலாளர்களின் கைக்குக் கிட்டுகிறது என்றும், 44 சதவீத ஊதியம் வழங்கப்படுவது 15 நாட்களைத் தாண்டி தாமதமாகிறது என்றும் இந்த அமைப்புகள் கூறுகின்றன. இத்திட்டத்துக்கான ஊதியம் தாமதமாவது இது புதிதல்ல. இதையெல்லாம் உணர்ந்துதான், 'இத்திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதியம் நிலுவையில் இருப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல்' என்று 2016-ல் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது. எனினும், நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டுவரும் சூழலில், நாட்டின் முறைசாரா பொருளாதாரத்தின் நிலை இன்னமும் மோசமான அளவிலேயே இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. அதற்கு முக்கியக் காரணம், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் என்றும் சொல்லப்படுகிறது. இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு குறைந்துவருவதால் கிராமப்புற மக்கள் பலரின் வருவாய் குறைந்துவருகிறது என்றும், இந்நிலை நீடித்தால் அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பல மாநிலங்களில் ஊதியத்துக்கான நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், அடுத்து வரவேண்டிய நிதிக்காக அம்மாநில அரசுகள் காத்திருக்கின்றன. பல அரசுகள் 100 சதவீதத்தைத் தாண்டிப் பயன்படுத்தியிருக்கின்றன. 2021அக்டோபர் 29 வரை, 21 மாநிலங்கள் 100 சதவீத நிதியைப் பயன்படுத்திவிட்டன. இத்திட்டத்துக்கான நிதியைப் பொறுத்தவரை, ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் நெகட்டிவ் நெட் பாலன்ஸ் முறையே ரூ.2,323 கோடி மற்றும் ரூ.1,999 கோடி. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில்தான் கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரை இத்திட்டத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் ஊதியம் தாமதமாவது தொடரும்.
அதிகரிக்கும் அழுத்தம்
பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பல்வேறு இன்னல்களுக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பிய பின்னர் அவர்களின் பிழைப்புக்குக் கைகொடுப்பது 100 நாள் வேலைத் திட்டம்தான். நாட்டின் எல்லாக் குடிமக்களுக்கும், வேலை பார்க்கும் உரிமை உண்டு என்பதை உறுதிசெய்யும் இந்தத் திட்டம் பல கோடி பேரின் பசியைத் தீர்க்கிறது. இந்தச் சூழலில், வேலை கிடைத்தாலும் ஊதியம் கிடைக்காது எனும் நிலையை எதிர்கொள்ள முடியாமல் கிராமப்புறத் தொழிலாளர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிற மாநிலங்களில் தினக்கூலி போன்ற வேலைகளைச் செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மோசமடைந்தது நாம் அறிந்தது. இன்னொரு பக்கம், சொந்த மாநிலங்களில் நகரங்களில் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்த பலரும் தங்கள் சொந்த மண்ணில் இத்திட்டத்தில் வேலைசெய்து பிழைத்துக்கொள்ளலாம் என நம்பி நகரத் தொடங்கி யிருக்கிறார்கள். இதனால், இத்திட்டத்தின்கீழ் வேலை பார்க்க முன்வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நடைமுறைச் சிக்கல்கள்
போதாக்குறைக்கு, இத்திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கான ஊதியத்தில், சாதி அடிப்படையில் தனி ரசீது முறையைப் பின்பற்றுமாறு கடந்த மார்ச் மாதம், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை காரணமாகவும் ஊதியம் வழங்கப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பிஏஇஜி, லிப்டெக் இந்தியா ஆகிய அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, பட்டியலினத்தவர் / பழங்குடியினர் அல்லாத பிற சமூகத்தினருக்கு ஊதியம் கைக்குக் கிடைப்பதில் தாமதம் நிகழ்ந்திருக்கிறது. அந்தச் சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டாலும், அதன் விளைவுகள் இப்போதும் தொடர்கின்றன என்கிறார்கள்.
மாநிலங்கள் தங்களிடம் இருக்கும் நிதியைக் கொண்டு தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வழங்கிவிட்டு, மத்திய அரசிடம் பின்னர் அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டுவிடலாம் எனச் சிலர் யோசனைகளை முன்வைக்கிறார்கள். சில மாநிலங்கள் அதைச் செய்தும் இருக்கின்றன. ஆனால், அப்படிச் செய்வது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கெனவே, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதில் குளறுபடிகள், முறைகேடுகள், வெளிப்படைத்தன்மையின்மை எனப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
இத்திட்டத்துக்கான நிதியைக் குறைத்ததற்கு மத்திய அரசு சொல்லும் காரணம் இன்னும் விநோதமானது. தேசிய அளவிலான பொதுமுடக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாலேயே, நிதியைக் குறைத்திருப்பதாகச் சொல்கிறது மத்திய அரசு. நிதி குறைந்துவிட்டால் கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் விளக்கமளித்திருக்கிறது. ஆனால், நிலைமை கைமீறத் தொடங்கிவிட்டது என்பதே கள நிலவரம்.
விமர்சனக் கணைகள்
இதெல்லாம் போதாது என, சீமான் போன்றோர் இத்திட்டம் குறித்து முன்வைக்கும் விமர்சனங்களும் கவனம் பெறுகின்றன. விவாதத்துக்கு வழிவகுக்கின்றன. மோடி, சீமான் போன்றோர் இத்திட்டம் தொடர்பாக அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கொண்டிருக்கும் பார்வைகளில் நியாயம் இருப்பதாகத் தொனித்தாலும், சுதந்திரத்துக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் மக்களின் வறுமையைப் போக்க அரசு எடுத்துவந்த முயற்சிகளின் பெரும் பலன்தான் இந்தத் திட்டம் என்பதே நிதர்சனம்.
இந்திய சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள், பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் என்பது காலங்காலமாக மறுக்கப்பட்டு வந்தது. பெண்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்றிருந்த சூழலும், ஒடுக்கப்பட்டவர்கள் / பழங்குடிகள் அந்தந்தப் பகுதி ஆதிக்க சாதியினரையே சார்ந்திருக்க வேண்டும் என்றிருந்த சூழலும் 100 நாள் வேலைத் திட்டத்தின் அறிமுகத்துக்குப் பின்னர் மாறத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, இத்திட்டத்தில் வேலை பார்ப்பவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் பெண்கள்தான். அந்த வகையில் சமூக அடுக்கில் பெரும் உடைப்பை ஏற்படுத்திய திட்டம் இது. இதற்கான வேலை அட்டை கிடைக்கப்பெற்றவர்களுக்கு, 15 நாட்களில் ஏதேனும் ஒரு வேலை கிடைத்துவிடும். அப்படி 15 நாட்களில் வேலை ஒதுக்கப்படாதபட்சத்தில், வேலையின்மைக்கான உதவித்தொகை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. கல்வித் தகுதியோ, தொழில் திறனோ இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு விதத்தில் சமாளித்துக் கொள்ளலாம் எனும் நம்பிக்கையை சாமானியர்களிடம் ஏற்படுத்தும் திட்டம் இது. அதிகாரப் பரவலாக்கல் மூலம் மக்களின் நலத்திட்டம் நேரடியாக மக்களைச் சென்று சேரும் எனும் நம்பிக்கைக்கு உதாரணமாகவும் இத்திட்டம் இருக்கிறது.
1960-கள் தொடங்கி பல்வேறு கட்டங்களாக முன்வைக்கப்பட்ட யோசனைகள், 1990-களில் நரசிம்ம ராவ் பரிந்துரைத்த திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக, 2006-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம், உலகின் மிகப் பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் இந்தத் திட்டத்தை நகர்ப்புறத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் என பேராசிரியர் ழான் த்ரேஸ் போன்றோர் குரல் எழுப்பிவரும் சூழலில், இத்திட்டம் முடங்கும் சூழல் உருவாவது துரதிருஷ்டவசமானது. நிலைமை இப்படியே நீடித்தால், கிராமப்புறப் பகுதிகளில் உட்கட்டமைப்புப் பணிகள் முடங்குவதுடன், ஏழை மக்களின் வாழ்வாதாரம் இன்னும் மோசமடையும்.
எனவே, இதுதொடர்பாக எழுப்பப்படும் நியாயமான குரல்களுக்கு அரசு செவிமடுத்தே ஆக வேண்டும்!