முதல்வர் வேட்பாளர் அல்ல, மாநிலங்களவை வேட்பாளர்!


கோவா முன்னாள் முதல்வர் லூசினோ ஃபெலேரோ, திரிணமூல் காங்கிரஸின் சார்பில் மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். 2 மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் ஐக்கியமான லுசினோ ஃபெலேரோவுக்கு, திரிணமூலின் துணைத் தலைவர் பதவியும் கிடைத்தது. கூடவே, வேறு சில பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. இப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மம்தா பானர்ஜி வழங்கியிருக்கிறார்.

திரிணமூல் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த அற்பிதா கோஷ், செப்டம்பர் மாதம் பதவிவிலகியதை அடுத்து, அக்கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஃபெலெரோவைத் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. நவம்பர் 29-ல் தேர்தல் நடைபெறுகிறது.

பாஜகவுக்கு உண்மையான அச்சுறுத்தலாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் இருக்கும் என்று பேசிவரும் ஃபெலெரோ, பாஜகவுக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் தலைவலியாகவே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் ஃபெலெரோவுக்கு நல்ல மதிப்பு இருந்தது. 2013 மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அம்மாநிலப் பொறுப்பாளர் எனும் முறையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டார் ஃபெலேரோ. கூட்டத்தில் கலந்துகொண்ட அப்போதைய முதல்வர் லல் தன்வாலா, ஃபெலேரோவிடம் காட்டிய பணிவும் மரியாதையும் பலரையும் வியக்கவைத்தது. சோனியாவின் நன்மதிப்பையும் ஃபெலேரோ பெற்றிருந்தார். இன்று காங்கிரஸ் கட்சியினரால் கடுமையாக வெறுக்கப்படுபவராகிவிட்டார். காரணம், திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த கையோடு, காங்கிரஸிலிருந்து மேலும் பலரை திரிணமூலுக்குத் திரட்டும் வேலையில் இறங்கிவிட்டார்.

ஏற்கெனவே, 9 பேரை அணிமாற்றிவிட்டவர், மேலும் பல காங்கிரஸ்காரர்களை அணிதிரட்டி, திரிணமூலுக்குக் கொண்டுசெல்லப்போவதாக அடிக்கடிச் சொல்லிவருகிறார். ஆனால், “ஃபெலேரோ ஒரு செல்லாக்காசு. அவர் அழைப்பை காங்கிரஸார் யாரும் பொருட்படுத்தப்போவதில்லை” என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார். ஏற்கெனவே, அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் மம்தா பானர்ஜிக்கும் கடும்பகை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கட்சி தாவிய ஃபெலேரோ மீதும் காங்கிரஸார் ஏக எரிச்சலில் இருக்கிறார்கள்.

உண்மையில், ஃபெலேரோ தலைமையில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள திரிணமூல் திட்டமிட்டிருந்தது. ஆனால், அவரை கோவாவில் முதல்வர் வேட்பாளராகக் களமிறக்குவதைவிட தேசிய அரசியலில் களமாடச் செய்ய மம்தா முடிவெடுத்துவிட்டார். அதன் தொடர்ச்சியாக, இப்போது மாநிலங்களவை வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார் ஃபெலெரோ. ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற ஃபெலேரோ, இனி அம்மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸுக்கு வலுசேர்ப்பார் என்று கருதப்படுகிறது. கிறிஸ்தவர்கள் நிறைந்த நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் ஃபெலேரோவின் செல்வாக்கு கைகொடுக்கும் என்று மம்தா நம்புகிறார்.

ஃபெலெரோ கட்சி மாறியதன் பின்னணியில் இருந்தது பிரசாந்த் கிஷோர்தான். காங்கிரஸில் இணையத் தயாராக இருந்த பிரசாந்துக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கசப்பு உருவாவதற்கு, இதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

x