1.25 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிய தீபாவளி விற்பனை


இந்த ஆண்டு தீபாவளி விற்பனை, 1.25 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பது வர்த்தகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. பெருந்தொற்றுக் கால முழு ஊரடங்குக்குப் பிறகு, படிப்படியாகப் பொருளாதார நடவடிக்கைகள் துறை வாரியாக மீட்சி பெற்றுவந்தாலும் இன்னும் முழுமையான மீட்சி எட்டப்படவில்லை. இந்தச் சூழலில், இந்த ஆண்டு தீபாவளி எப்படி இருக்குமோ என்று கவலைப்பட்ட வர்த்தகர்கள், இந்த விற்பனையால் மகிழ்ச்சியடைந்திருப்பதில் வியப்பில்லை. சொல்லப்போனால், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடுவில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனை நடந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

7 கோடி வர்த்தகர்கள் உறுப்பினர்களாக உள்ள அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சிஏஐடி), தங்களுடைய அமைப்புகளின் மூலம் திரட்டிய தரவுகளிலிருந்து தீபாவளி விற்பனை அளவு தெரியவருகிறது. அமைப்பின் தேசியத் தலைவர் பி.சி. பாரதியா, தலைமைச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் இதைத் தெரிவித்திருக்கின்றனர். டெல்லியில் மட்டும் இந்த ஆண்டு ரூ.25,000 கோடிக்கு வர்த்தகம் நடந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமைப்பு சாராத துறைகளிலும் விற்பனை நடந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரிகள் கடுமையான சோதனைகளுக்கு ஆளானார்கள். விற்பனையில் சரிவு, வருவாயில் சரிவு என்று இரு வகைகளிலும் அவதிப்பட்டனர். இந்த விற்பனை அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறது.

இந்த ஆண்டு நுகர்வோரிடையே ‘பிஎன்பிஎல்’ (BNPL) திட்டத்துக்கு ஆதரவு அதிகம். அதாவது Buy Now Pay Later (இப்போது வாங்கிக்கொள்ளுங்கள், பிறகு பணம் கொடுங்கள்) என்பதுதான் அந்தத் திட்டம். முன்பெல்லாம் சிற்றூர்களில்கூட தீபாவளி, பொங்கலுக்கு தங்களுடைய வாடிக்கையாளர்களை எதிர்கொண்டால் ஜவுளிக் கடைக்காரர்கள், ‘என்ன துணி வாங்கலியா?’ என்று கேட்பார்கள், இன்னும் சம்பளம் அல்லது போனஸ் வரவில்லை என்று சொன்னால், ‘அது வரும்போது வரட்டும், நம்மகிட்ட வாங்கிக்கங்க’ என்பார்கள். அது வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நிலவிய உறவின் அடையாளம். ஆன்லைன் வர்த்தக யுகத்தில் இப்போது அதுவும் புதிய உத்தியாக வளர்ந்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் வீட்டுக் கடன், வாகனக் கடன்போல தனிநபர் கடன்களையும் வாங்கிக்கொள்ளுமாறு, குறைந்த வட்டியில் வங்கிகள் தங்களிடமுள்ள ரொக்க கையிருப்பைக் குறைக்க முன்வந்தன. ஜூலை-செப்டம்பர் காலத்தில் தனிநபர் கடன்கள் 29.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இதில் கணிசமான பகுதி தீபாவளிக்காக வாங்கப்பட்டதாகவும் இருக்கலாம்.

இந்த ஆண்டு விலைவாசி உயர்வு அதிகரித்துவருவதாக ரிசர்வ் வங்கி கவலைப்பட்டது. எனவே, நுகர்வோர்கள் வாங்குவதைத் தள்ளிப்போடுவார்களோ அல்லது குறைத்துக்கொண்டுவிடுவார்களோ என்றும் சந்தேகம் எழுந்தது. எனினும், கடந்த பத்தாண்டுகளில் இருந்திராத வகையில் தீபாவளி விற்பனை அதிகபட்சமாக அமைந்துவிட்டது. இதற்குக் காரணம் மக்களுடைய வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது என்பதல்ல. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வீட்டோடு கிடந்தவர்களும் வீட்டிலிருந்து வேலை செய்தவர்களும் அவ்வப்போது சில தேவைகளுக்கு நுகர்பொருட்களைப் பயன்படுத்தியபோது அவற்றின் போதாமைகளும் பழுதுகளும் சில பண்டங்களின் தேவைகளும் உணரப்பட்டன. எனவே, தீபாவளிக்கு நெருக்கமாக முழு ஊரடங்கு விலக்கப்பட்டதாலும் பண்டிகையாக இருப்பதாலும் பொருட்களை வாங்க இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் எனக் கருதலாம்.

நவம்பர் 14-க்குப் பிறகு முகூர்த்த நாட்கள் வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக திருமண மண்டபங்களில் திருமணம் நடத்தவும் அதிகம் பேரை அழைத்து விருந்து, விழாக்கள் நடத்தவும் விதித்திருந்த தடைகள் விலக்கப்பட்டுவிட்டன. போக்குவரத்து கிட்டத்தட்ட பழைய நிலைக்கு வந்துவிட்டது. தடுப்பூசிகள் வந்துவிட்டது என்பதுடன் 2 முறை செலுத்தியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பூஸ்டர் ஊசி என்று 3-வது ஊசிக்குக் கூட பலர் தயாராகிவருகின்றனர். கோவிட் பரவுவது குறைந்துள்ளது, அதனால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. அதைவிட முக்கியம் இப்போது தடுப்பூசி மட்டுமல்ல, காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்து, ஊசிகளும் வந்துவிட்டன. எனவே, கோவிட்-19 அச்சம் தணிந்திருக்கிறது. (ஆனால், அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்தால் வரப்போகும் ஆபத்து குறித்தும் அரசு எச்சரித்துத்தான் வருகிறது.)

இந்த ஆண்டு நுகர்வோர்கள் இந்தியாவில் தயாராகும் பொருட்களையே அதிகம் வாங்கினார்கள். இந்த வகையில் சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மதிப்பிட்டுள்ளனர். அதே சமயம் இந்த ஆண்டு இந்திய – சீன இருதரப்பு வர்த்தகம் உச்ச அளவையும் தொட்டிருக்கிறது.

அகல் விளக்கு, மெழுகுவர்த்திகள், காகிதத்தில் தயாரிக்கப்படும் விளக்குகள் போன்றவை இந்தியத் தயாரிப்புகளாகவே வாங்கப்பட்டதால் உள்நாட்டுக் கைவினைஞர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் போன்றோருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. கைவினைப் பொருட்கள், துணி வகைகள், காலணிகள், ஆடைகள், உலர் பழங்கள், இனிப்பு-கார வகைகள், கடிகாரங்கள், பொம்மைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், நவநாகரிக ஆயத்த ஆடைகள் நன்கு விற்பனையாகின.

தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் விற்பனை ரூ.9,000 கோடியைத் தாண்டியது. தீபாவளிக்குச் சமீபத்தில் தங்கம், வெள்ளி விலை அதிகமாக உயராததும் இதற்கு முக்கியக் காரணம். பொதிகளில் அடைத்து பொருட்களை விற்பவர்களுக்கு ரூ.15,000 கோடிக்கு விற்றிருக்கிறது. ஆன்லைன் வர்த்தகமும் இந்த ஆண்டு எழுச்சி பெற்றது.

ஆன்லைன் வர்த்தகத்தில் 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 23 சதவீத விற்பனை அதிகமாகியிருந்தது. கிட்டத்தட்ட ரூ.32,000 கோடிக்குப் பொருட்கள் ஆன்லைனில் விற்றுள்ளன. பிளிப்கார்ட் நிறுவனம் இதில் 64 சதவீத அளவுக்கு விற்றுள்ளது. மிகப் பெரிய நகரங்களில் மட்டுமல்ல 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களிலும்கூட ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. அமேசானும் பிளிப்கார்ட் நிறுவனமும் தீபாவளி விற்பனையை அக்டோபர் முதல் வாரத்திலிருந்து போட்டி போட்டுத் தொடங்கின. முழு ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்தவர்கள், அவசரத் தேவைக்கான பொருட்களை ஆன்லைனில் வாங்கிப் பழகினர்.

இந்தியாவில் விரைவிலேயே 5 ஜி சேவை தொடங்கப்பட உள்ளதால் ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள், அதிகம் நடுத்தர விலையுள்ள ஸ்மார்ட்போன்களையே அதிகம் வாங்கினர். இந்த வகையில் அமேசானில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமே 84 சதவீதமாக இருந்தன. அமேசானில் முதல்முறையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்று மதிப்பிட்டுள்ளனர். அமேசான், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட், ரிலையன்ஸின் ஜியோமார்ட், டாடா குழுமம் ஆகியவற்றுக்கு இடையே இந்த சந்தையைப் பங்கிட்டுக்கொள்வதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தீபாவளி விற்பனை 2016 முதல் 2021 வரையில் படிப்படியாக உயர்ந்தே வந்திருக்கிறது. ஆண்டுவாரியாக அது 35,000 கோடி (2016), 43,000 கோடி (2017), 50,000 கோடி(2018), 60,000 கோடி(2019), 72,000 கோடி(2020) என அதிகரித்து 2021-ல் 1.25 லட்சம் கோடியாகியிருக்கிறது. கணினிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் ஆகியவை குழந்தைகள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக அதிகம் வாங்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தே வேலை செய்ய வசதியாகச் சுழல் நாற்காலிகள், கணினியை வைத்துக்கொள்ள மேசைகள், புத்தக அலமாரிகளும் அதிகம் வாங்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களில் மின்சார பேட்டரி வாகனங்களுக்குத் தேவை அதிகமிருந்தாலும் உற்பத்தி அதிகமில்லை. கார்கள் விற்பனை எதிர்பார்த்தபடி அதிகமாகவில்லை.

வழக்கம்போல தீபாவளிக்கான அனைத்துப் பொருட்களும் நல்ல விற்பனையை அடைந்தாலும் விலை உயர்வு காரணமாக தங்கம், வெள்ளிப் பொருட்களை நடுத்தர மக்களால் வாங்க முடியவில்லை. மக்களிடம் அதிகம் பணம் புழங்கினால் இந்த விற்பனை மேலும் அதிகரிக்கும். அதற்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். அதை அரசுதான் செய்ய வேண்டும்!

x