மீண்டும் மீண்டும் கனவு காணும் ஆரஞ்சு பழ வியாபாரி: பத்மஸ்ரீ விருதாளர் ஹரிகலா ஹஜப்பா


‘குடியரசுத் தலைவர் கரங்களால் நேற்று 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெற்ற ஆளுமைகளில் ஒலிம்பிக் புகழ் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஹரிகலா ஹஜப்பா.

ஆரஞ்சு பழ வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் பள்ளி நடத்தி வரும் அவரை இந்திய அரசு கவுரவித்தது என்று பரவலாகப் பேசப்பட்டது. பழம் விற்ற பணத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்க வைப்பதே பெரும்பாடு; இதில், ஒரு எளிய மனிதர் எப்படிப் பள்ளிக்கூடத்தை உருவாக்கினார் என்று மலைப்பாக இல்லையா! இன்றுவரை இந்த மனிதருக்குச் சொந்த வீடுகூட கிடையாது. புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விருது விழாவுக்குச் செல்லத் தேவையான பயணச் செலவையே, கர்நாடக அரசுதான் அவருக்கு வழங்கியது. இந்நிலையில் எப்படி இதை அவர் சாதித்தார்!?

முதலில் மதரஸா பள்ளி!

கர்நாடகா- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள ஹரிகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹஜப்பா. அங்கு பெரும்பாலும் துளு, பெரி மொழிகளை மட்டுமே அறிவர். ஹஜப்பாவுக்கும் அவை மட்டுமே பரிச்சயம். இந்நிலையில் ஒருநாள் மங்களூரூ சந்தையில் ஆரஞ்சு பழங்களை விற்றுக் கொண்டிருக்கையில், அவரிடம் கன்னடத்தில் பேசியபடி ஒரு தம்பதி விலாசத்தை விசாரித்தனர். பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பிழந்த ஹஜப்பாவுக்கு கன்னடம் தெரியவில்லை. அதனால் விலாசம் கேட்ட தம்பதிக்கு வழிசொல்ல முடியவில்லை. தான் படிக்காது போனாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குக் கல்வியின் கதவைத் திறந்துவைக்கும் மின்னல் கீற்று, ஹஜப்பா மனத்துக்குள் அந்த நொடியில் பாய்ந்தது.

வழக்கமாக அவர் வேலைசெய்யும் துவாஹா ஜம்மா மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்களிடம் தனது யோசனையைப் பகிர்ந்துகொண்டார். அவருக்குப் பச்சைக்கொடி காட்டிய முஸ்லிம் சகோதரர்கள், அவர்களால் இயன்ற நிதி உதவியை நல்கினர். 1994-ல் ‘ரவலத்துல் உலமா மதரஸா பள்ளி’யைப் புது படுப்பூ பகுதியில் ஹஜப்பா தொடங்கினார். அதில் முஸ்லிம் சமூகச் சிறுவர்கள் சேர்ந்து படிக்கத் தொடங்கினர். பள்ளியைச் சிறப்பாக நடத்தவே, துவாஹா ஜம்மா மஸ்ஜித் கமிட்டியின் பொருளாளராகவே நியமிக்கப்பட்டார்.

அனைவருக்குமான கன்னடவழிப் பள்ளி!

ஆனால், பெண் குழந்தைகளும் பிற சமூகக் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல என்ன செய்யவிருப்பதாக ஹஜப்பாவின் மனம் அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தது.

கன்னடவழிப் பள்ளியைத் தொடங்கும் உந்துதல் ஏற்பட்டது. மதரஸாவிலேயே இதைச் சாத்தியப்படுத்தலாமா என்று கேட்டபோது, ‘அரபு மொழி தவிர வேறு கற்றல் மொழிக்கு அங்கு அனுமதி இல்லை’ என்ற பதில் வந்தது. சரி... இனி ஆரஞ்சு பழம் விற்று கிடைக்கும் வருவாயை சேமித்துப் பள்ளிக்கட்டலாம் என்று முடிவெடுத்தார். விரைவில், அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்ற நிதர்சனம் புரிந்தது.

50 காசு,1 ரூபாய் வீசி எறிந்தவர்கள்!

நல்லுள்ளம் படைத்தவர்களிடம் உதவி கோரியபோது நிலமும், கூடுதல் பணமும் கிடைத்தது. ஆனால், அரசாங்கத்தின் ஒப்புதல் பெறவேண்டி அரசு அலுவலகங்களுக்குள் அடியெடுத்து வைத்தபோதுதான், உண்மையான உலகத்தை மனிதர் எதிர்கொள்ளத் தொடங்கினார். ஏளனப் பார்வையும், யாசகர் போல 50 காசு, 1 ரூபாயை வீசி எறிந்து விரட்டுவதும் நிகழ்ந்தன. ஆனால், இதற்கெல்லாம் ஹஜப்பா தன்னுடைய இலக்கிலிருந்து விலகவில்லை.

தான் சிறுகச் சிறுக சேகரித்த பணத்தைவைத்து, 1999-ல் புது படுப்பூ பகுதியில் 40 சதுர அடிக்கு நிலம் வாங்கினார். மேலும் சிலரின் உதவியால் 1 ஏக்கர் நிலத்தை அதே பகுதியில் வாங்கினார். ஓராண்டுக்காலம் அரசாங்கத்தின் அத்தனை கதவுகளையும் தட்டி, கர்நாடக அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதலை வென்றெடுத்தார்.

மலைபோல் சவால்!

தன்னுடைய இலக்கில் ஹஜப்பா கொண்டிருந்த உறுதிப்பாட்டை உணர்ந்த சில அதிகாரிகளும் தங்களால் முடிந்த நிதியுதவியைச் செய்தனர். படிப்படியாகப் பள்ளிக்கூடத்துக்கான கட்டிடங்களை எழுப்பத் தேவையான சிமென்ட், இயந்திரங்கள் உட்பட பலவற்றுக்கு உதவிக் கரங்கள் நீண்டன. ஆனால், அந்த நிலப்பரப்போ சவால் மிகுந்ததாக இருந்தது. மலைக் குன்றுபோல் இருந்த இடத்தை சமவெளியாக்குவதுதான் முதல் வேலையாக மாறியது.

6 புல்டோசர்கள் கொண்டு சமவெளியை உருவாக்கி 8 வகுப்பறைகள், 2 கழிப்பறைகள் கொண்ட பள்ளிக்கூடம் சில மாதங்களில் அங்கு உயிர்த்தெழுந்தது. 2001 ஜூன் 9 அன்று பள்ளிக்கூடத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. பரவசத்திலிருந்த ஹஜப்பாவுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் செல்வந்தர்களும் மேஜை, நாற்காலிகள் கொடுத்து செயல்படும் பள்ளிக்கூடமாக மாற்ற உதவினர்.

பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு கமிட்டியை உருவாக்கி, பள்ளிக்கூட உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியை பெறுவதற்கான வழிகாட்டுதலைக் கல்வித் துறையும் வழங்கியது. இதன்மூலம் ‘சர்வ சிக்‌ஷா அப்யான்’ வழங்கும் அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுகீட்டைப் பெறமுடியும். ஹஜப்பா நாணயம் மிகுந்தவராக அறியப்பட்டதால், பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுவுக்குத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான நிதி முறையாக வழங்கப்பட்டது. அதைக் கொண்டு, தன்னுடைய பள்ளிக்கு 4 கணினிகளை வாங்கினார்.

மீண்டும் ஆரஞ்சு வியாபாரம்!

5-ம் வகுப்புவரை கொண்ட இந்தப் பள்ளியில் இன்று 91 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இருந்தாலும் 10-வதுவரை கொண்ட பள்ளியாகக் கட்டினால், தனது கனவு அடுத்த கட்டத்துக்கு நகருமே என்று தோன்றியது. இப்போது, ஹஜப்பாவை அறியாத கல்வி அதிகாரிகள் இல்லை. உடனடியாக மேல்நிலைப் பள்ளிக்கான ஒப்புதல் கிடைத்தது.

2003-லிருந்து, மீண்டும் ஆரஞ்சு விற்றுக் கிடைத்த சொற்ப பணத்தைச் சேமிக்கத் தொடங்கினார். அடுத்த ஏழாண்டுக்காலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து கொடைவள்ளல்களின் நிதி உதவியையும் சேகரித்து, 2010-ல் மேல்நிலைப் பள்ளிக்கான கட்டிட வேலையைத் தொடங்கினார். 2012-ல் பள்ளி முழுமை பெற்றது.

நூலகம், 8-ம் வகுப்பு தொடங்கி 10-வதுவரை 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கூடமாக செயல்படத் தொடங்கியது. கல்பனா சாவ்லா, சுவாமி விவேகானந்தர் போன்ற ஆளுமைகளின் பெயர்களை ஒவ்வொரு வகுப்பறைக்கும் சூட்டினார். இந்நிலையில் கல்விக்கூடங்கள் அனைத்தும் கரோனா காலத்தில் இழுத்து மூடப்பட்டுக் கிடந்தபோதும், ஹஜப்பா தினந்தோறும் சென்று தன் பள்ளிக்கூடத்தின் வளாகத்தை தூய்மைப்படுத்தினார். நேற்று பத்மஸ்ரீ வாங்கிய கையோடு பியூசி 1, பியூசி 2 படிப்பதற்கான ஜூனியர் கல்லூரி கட்டியெழுப்பும் உத்வேகத்தில், மீண்டும் ஆரஞ்சு பழம் விற்க ஊருக்குப் புறப்பட்டார்.

x