பனிப்புகையில் தொலைந்த தாஜ்மகால்


சித்தரிப்பு படம்

தீபாவளி போய் 3 நாட்களான பிறகும் டெல்லி, ஆக்ரா போன்ற பகுதிகள் இன்னமும் புகை மூட்டத்திலிருந்து விடுபடவில்லை. தீபாவளியை ஒட்டிய விடுமுறைக்காக ஆக்ராவுக்கு பயணித்த சுற்றுலாப் பயணிகள், பனிப்புகை மூட்டத்தில் மறைந்த தாஜ்மகாலின் தோற்றத்தால் ஏமாற்றமடைந்தனர்.

குளிர்காலத்து மூடுபனி, வழக்கமான வாகனப் புகை மாசுபாடு, அண்டை மாநிலங்களில் அறுவடை முடிந்த வயல்கள் கொளுத்தப்படுவது ஆகிய காரணங்களால், வழக்கமாகவே இப்பகுதிகளில் புகை மூட்டம் அதிகரித்திருக்கும். தற்போது தீபாவளி பட்டாசுகள் வெடிப்பால் சூழந்த புகை காரணமாக, கண்களை மறைக்கும் அளவுக்கு பனிப்புகை சூழ்ந்திருக்கிறது. அரசுகளின் கட்டுப்பாடுகளை மீறி ஆண்டுதோறும் அதிகரிக்கும் பட்டாசு வெடிப்பு, இந்த தீபாவளிக்கும் உச்சம் தொட்டதில் தீபாவளி போயும் புகை மூட்டம் விலகாதிருக்கிறது.

ஞாயிறு அன்று புகைமூட்டத்தில் தொலைந்த தாஜ்மகால்

மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தகவல்படி ஆக்ராவின் காற்று தரக் குறியீடு 436-ஐ கடந்துள்ளது. இது மோசம், படு மோசம் என்பதைக் கடந்து ’கடுமையான’ காற்று மாசுபாட்டை எட்டியதைக் குறிப்பதாகும். டெல்லியிலும் இதே நிலைமை நிலவுகிறது. இன்றைய(நவ.7) நிலவரப்படி, அங்கு காற்றின் தரக் குறியீடு 437 என்பதாக நிலவுகிறது. கரோனா பரவல் காரணமாக நுரையீரல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு ஆளாகி மீண்டவர்கள், இந்த பனிப்புகையால் அவதி அடைந்து வருகின்றனர்.

x