2 முதல் 18 வயது வரையோருக்கான கரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள், இந்தியாவில் தொடங்கியுள்ளன. ஆனால், கரோனா தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு பெரும்பாலான பெற்றோர் தயக்கம் காட்டுவது ஆய்வில் தெரிய வருகிறது.
இந்தியாவில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியாக, ’ஸைகோவி-டி’(ZyCoV-D) என்ற தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி, உலகிலேயே முதன்முதலாக டிஎன்ஏ அடிப்படையில் முழுமையாக இந்தியாவில் தயாரானதாகும்.
ஆனால், பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. இது தொடர்பாக புதுச்சேரியின் ஜிப்மர், சண்டிகரின் மற்றொரு மருத்துவ உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் சர்வே ஒன்றை மேற்கொண்டது.
இந்த சர்வே அடிப்படையில், 3-ல் ஒரு பெற்றோர் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கலுக்கு ஆர்வமாக உள்ளனர். 3-ல் 2 பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு புதிய கரோனா தடுப்பூசி வழங்குவதில் மறுப்போ, தயக்கமோ தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இம்மாதம், நாடு முழுக்க மழலைக் கல்வி தவிர்த்து அனைத்து வகுப்புகளை உள்ளடக்கிய பள்ளிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. கரோனா அச்சமின்றி தங்கள் குழந்தைகளை பெற்றோரும் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மருத்துவர்கள், “இதர சிறு குழந்தைகளைவிட இணைநோய்கள் பாதித்துள்ள 12-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கரோனா தடுப்பூசி வழங்க பெற்றோர் முன்வருவது அவசியம்” என வலியுறுத்தி உள்ளனர்.