ஆர்யன் கான் வழக்கிலிருந்து என்சிபி அதிகாரி நீக்கம்


ஷாருக் உடன் ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் வழக்கிலிருந்து, அதன் விசாரணை அதிகாரியான சமீர் வான்கடே நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை உபயோகித்ததாக கைது செய்யப்பட்டனர். கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த, மத்திய போதை தடுப்பு பிரிவின் மண்டல இயக்குநரான சமீர் வான்கடே தொடர்ந்து பரபரப்பாக செய்திகளில் அடிபட்டார். துணிச்சலான அதிகாரி என்று பலர் அவரைப் பாராட்டினர். மத்திய அரசின் அழுத்தத்தால் மகாராஷ்டிராவின் நற்பெயரைக் கெடுக்க சமீர் துணை போகிறார் என்றும் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

சமீர் வான்கடே

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக், தொடர்ந்து சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். சமீர் பணியில் சேர்ந்தது தொடங்கி அவரது குடும்பம், உடுத்தும் விலையுயர்ந்த ஆடைகள் என சகலத்திலும் சச்சரவைக் கூட்டினார். உச்சமாக ஆர்யன் கான் வழக்கில் அவரை விடுவிக்க சமீர் வான்கடே பணபேரம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு, என்சிபி அமைப்புக்குச் சங்கடம் தந்தது.

இதையடுத்து சர்ச்சைக்கு ஆளான சமீர் வான்கடே, ஆர்யன் கான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கான் உட்பட சமீர் விசாரித்து வரும் 6 வழக்குகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். என்சிபியின் மும்பை பிரிவு விசாரித்து வந்த இந்த வழக்குகளை, என்சிபி டெல்லி பிரிவு விசாரிக்க உள்ளதாக அந்த அமைப்பின் உயரதிகாரிகள் இன்று (நவ.5) மாலை தெரிவித்தனர்.

x