அகதிகளுக்கான திறந்தவெளிச் சிறையாகிறதா இந்தியா?


‘புகலிடம் தேடிவரும் அகதிகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை’ எனும் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அதிகாரிகளின் அடக்குமுறை, சமூகவிரோதிகளின் வன்முறைப் போக்கு, பொது இடங்களில் அவமதிப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளில் அகதிகள் அல்லாடுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஜூலை மாத இறுதிவரை, அகதிகள், புகலிடம் கோருபவர்கள் என மொத்தம் 42,882 பேர் இந்தியாவுக்கு வந்திருப்பதாக அகதிகளுக்கான ஐநா ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவர்களில் 15,402 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள். 23,478 பேர் மியான்மரிலிருந்து வந்தவர்கள். தவிர சோமாலியா, காங்கோ, சூடான் என ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

அகதிகளில் பலர், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதைக் காட்டிலும் இந்தியாவுக்கு வருவதையே விரும்புகிறார்கள். இங்கு கரிசனத்துடன் நடத்தப்படுவோம் எனும் எண்ணமே, பல சிரமங்களைக் கடந்து இந்தியாவை நோக்கி அவர்களைப் பயணம் செய்ய வைக்கிறது. ஆனால், இங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதுதான் வேதனையான விஷயம்.

சமூக விரோதிகளால் தாக்கப்படுவது, பொது இடங்களில் புறக்கணிக்கப்படுவது, சீண்டல்களுக்குள்ளாவது, பாலியல் வன்முறைகளுக்குள்ளாவது வரை பல துயரங்களை அகதிகள் எதிர்கொள்கிறார்கள். முறையான ஆவணங்கள் இல்லாததால் அகதிகள் காவல் துறையினர், அதிகாரவர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். கறுப்பின மக்கள் இனரீதியான வெறுப்புக்குள்ளாவதும் ஏளனத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகியிருக்கிறது.

தங்கள் குறைகளைச் சொல்ல, டெல்லியில் உள்ள அகதிகளுக்கான ஐநா ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றாலும் அதிகாரிகளைச் சந்திக்க முடியாமல், அகதிகள் தவிக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகின்றன. போதிய நிதி கிடைக்காததால் அகதிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக, அகதிகளுக்கான ஐநா ஆணையம் தன் பங்குக்குத் தெரிவித்திருக்கிறது.

உரிய ஆவணங்கள் இல்லாததால், குடியிருக்க வீடுகள் கிடைக்காமல் தெருவிலேயே வசிக்க வேண்டிய நிலையில் பல அகதிகள் இருக்கிறார்கள். பலர் தங்களுக்கு உதவக் கோரி டெல்லியின் வீதிகளில் கூடாரம் இட்டுப் போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்களுக்குச் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குறிப்பாக, குளிர்காலம் தொடங்குவதால் அவர்களுக்குக் கூடுதல் சிரமங்கள் காத்திருக்கின்றன.

2017 முதல் வசிப்பிடத்துக்கான அனுமதிகள், நீண்டகால விசா ஆகியவை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக அகதிகள் பலர் வேதனையுடன் கூறுகிறார்கள். இதனால், இருப்பிடங்கள் முதல் மருத்துவ உதவிகள்வரை உரிய வசதிகள் கிடைக்காமல் பலரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

உள்நாட்டுப் போர்கள், வன்முறைகள், சித்ரவதைகள் எனத் தங்கள் நாடுகளில் வாழவே முடியாத சூழலில் உயிரச்சத்துடன் புகலிடம் தேடி வருபவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தர வேண்டும்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோருகிறார்கள்.

“அதிகாரிகள் அகதிகளை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும். அகதிகளின் வலிகளைப் புரிந்துகொண்டு அவர்களை மரியாதையுடன் நடத்த பொதுச் சமூகத்துக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அரசின் செவிகளை எட்டுமா?

x