“நீட் சர்ச்சையில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்” - ராகுல் காந்தி 


புதுடெல்லி: நீட் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பது உறுதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமராகவே இன்னும் பதவியேற்கவில்லை, அதற்குள் அவர் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நரேந்திர மோடி சிதைத்துள்ளார் என்றும் ராகுல் சாடியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் இந்தியில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்றில், “நரேந்திர மோடி இன்னும் பிரதமராகக் கூட பதவியேற்கவில்லை. அதற்குள் நீட் தேர்வு முறைகேடு 24 லட்சம் மாணவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் சிதைத்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளனர். அதே மையத்தில் எழுதிய சிலர் சாத்தியமே இல்லாத மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனாலும் இந்த அரசு தொடர்ந்து கேள்வித்தாள் கசிவை மறுத்து வருகிறது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தொழிலாக செய்து கொண்டிருக்கும் மாஃபியா கும்பலை கண்டறிய திட்டம் வைத்துள்ளது. நாங்கள் எங்களின் தேர்தல் அறிக்கையிலேயே வினாத்தாள் கசிவுக்கு எதிராக செயல்படுவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளோம். இன்று நான் இந்நாட்டின் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் உறுதி அளிக்கிறேன். நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையில் உங்கள் அனைவரின் குரலாக வலுவாக ஒலிப்பேன். உங்கள் எதிர்காலத்துக்காகக் குரல் கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீட் தேர்வில் வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய உயர் கல்வித் துறை செயலர் சனிக்கிழமை விளக்கம் அளித்திருந்தார்.

அதேவேளையில், 24 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை என்றும், புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும அவர் தெரிவித்தார். இருப்பினும் நீட் எதிர்ப்புக் குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன. மகாராஷ்டிரா அரசு தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்வேண்டும் என்றும் கோரியிருந்தது.

x