அம்பானிக்கான வெடிகுண்டு மிரட்டலில் ஆரம்பித்த விசாரணை; தொடர்ந்து உருளும் பெருந்தலைகள்


மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான அனில் தேஷ்முக், திங்கள்(நவ.1) இரவு கைதானார். முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுத்ததில் தொடங்கிய விசாரணை, அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகள் என பல தலைகளை உருட்டி வருகிறது.

சச்சின் வாஸே

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை ‘அன்டிலியா’ வீட்டருகே, வெடிபொருட்கள் அடங்கிய காரும் அதில் அம்பானி குடும்பத்துக்கான மிரட்டல் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது. அம்பானியின் பின்புலம் காரணமாக என்ஐஏ வரை இந்த வழக்கில் இறங்கி விசாரணை நடத்தினர். குண்டுவைப்பு பின்னணியில் இருந்த மும்பை என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல் அதிகாரியான சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார். சஸ்பெண்டில் இருந்த சச்சின் வாஸே, தான் மீண்டும் பணியில் சேரக் காரணமான மாநில உள்துறை அமைச்சரான அனில் தேஷ்முக்கை இதில் மாட்டிவிட்டார்.

மும்பை மதுவிடுதிகளில் பணம் வசூலித்து மாதம் ரூ.100 கோடி கப்பம் செலுத்துமாறு காவல் துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதாக, அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மும்பை கமிஷ்னர் பரம்பிர் சிங் குற்றம்சாட்டினார். பல தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கவே அனில் ராஜினாமா செய்தார். தன்னை ஊர்க்காவல் படைக்கு மாற்றல் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை சென்ற பரம்பிர் சிங், அதன்பின் தலைமறைவானார்.

அனில் தேஷ்முக்

மகாராஷ்டிராவை ஆளும் ’சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்’ கூட்டணிக்கு இதில் தர்மசங்கடம் நேர்ந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் வலுக்கவே, சிவசேனா அவரை கைகழுவியது. சிவசேனாவின் தீவிர பாஜக எதிர்ப்பு நிலையால், மாகாராஷ்டிர விவகாரங்களில் பாயக் காத்திருக்கும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் அனில் தேஷ்முக் மீது பாய்ந்தன.

சிபிஐ விசாரணையை தொடர்ந்து அனில் தேஷ்முக் அமலாக்கத் துறையின் கிடுக்குப்பிடிக்கும் ஆளானார். அனிலின் பல கோடி சொத்துகள் முடக்கப்பட்டதுடன், அவர் முதலீடு செய்திருந்த போலி நிறுவனங்களும் துருவப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திங்கள் இரவு அனில் தேஷ்முக்கிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அமலாக்கத் துறை விசாரணையின் முடிவில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகேஷ் அம்பானி வீட்டுக்கான வெடிகுண்டு மிரட்டலில் தொடங்கிய வழக்கு விசாரணை, அதை அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கெங்கோ வெடித்து வருகிறது. மாநில-மத்திய அரசுகளுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடாகவே இதுவரையிலான விசாரணையின் போக்கும், கைது படலங்களில் உருளும் தலைகளும் தொடர்ந்து வருகின்றன. நிஜமான விசாரணை மேற்கொள்ளப்பட்டால், அதிர்ச்சிகரமான அரசியல்-காவல் துறை-நிழலுலக மாஃபியாக்களின் வலைப்பின்னல் அம்பலமாகும்.

கைதான சச்சின் வாஸே, என்கவுன்டரின் பெயரில் நடத்தில் கொலைகள், ஆள்கடத்தல் மற்றும் பண மிரட்டல்களே பாலிவுட் சினிமாக்களை தூக்கிச் சாப்பிடுபவை. தற்போது கைதான அனில் தேஷ்முக், 4 நாள் அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அமலாக்கத் துறைக்கு அப்பாலும் அவர் மீதான விசாரணை, சச்சின் வாஸே மற்றும் பரம்பிர் சிங் ஆகியோர் தொடுத்த குற்றச்சாட்டுகளை மையமாக்கி வேகமெடுத்தால் மகாராஷ்டிரா தாங்காது.

x