மோடி பேரணி குண்டு வெடிப்பு வழக்கு: 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை


குண்டு வெடிப்பு நேரிட்ட இடம்

2013-ல் மோடி பங்கேற்க இருந்த பாட்னா பேரணியில் குண்டு வெடித்து 6 அப்பாவிகள் உயிரிழந்த வழக்கில் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அக்டோபர் 27,2013-ல் அப்போதைய குஜராத் முதல்வரும், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி தலைமையில், பீகார் தலைநகர் பாட்னாவில் ஒரு பேரணி மற்றும் கூட்டம் நடப்பதாக இருந்தது. மோடி வருவதற்கு சற்று முன்னராக கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. அதே நேரம் பாட்னா ரயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவங்களில் 6 அப்பாவிகள் உயிரிழந்தனர். 89 பேர் காயமடைந்தனர்.

மோடி

தேசிய பாதுகாப்பு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்த இந்த வழக்கில், நாசகார செயலில் ஈடுபட்டதாக 10 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி மற்றும் இந்திய முஜாஹிதின் அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதில் போதிய சாட்சியம் இல்லையென்று ஒருவர் விடுதலையாக 9 பேரை குற்றவாளிகள் என முன்னதாக அறிவித்திருந்த பாட்னா என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இன்று(நவ.1) குற்றவாளிகளுக்கான தண்டனை தீர்ப்புகளை வழங்கியது. அதில் 4 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் கடுங்காவலும், மேலும் 2 பேருக்கு 10 ஆண்டு; ஒருவருக்கு 7 ஆண்டு என சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன். இவர்களில் 18 வயது நிரம்பாத ஒருவர் சீர்திருத்த மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

x